5ஜி அலைக்கற்றையில் ஊழல் எப்படி செய்யனும்-னு திமுக எம்பி ஆ.ராசாவுக்குத்தான் தெரியும்; பாஜகவுக்கு தெரியாது… வானதி சீனிவாசன் பாய்ச்சல்..!!
Author: Babu Lakshmanan3 August 2022, 3:57 pm
5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடந்துள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஆக. 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.
பாஜக மகளிரணி சார்பில் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய கொடியை எந்தியவாறு விழிப்புணர்வு செய்ய உள்ளதாகவும், இந்த 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பல்வேறு கலைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை 5ஜி அலைக்கற்றை ஏலம் பெற்று தந்துள்ளது என்றும், இதுபற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்கு தான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தெரியும், அதனால் தான் அவர் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
அதுமட்டுமின்றி, இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது என்றும், இலக்கை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோல் மத்திய அரசு சொல்லி தான் விலை ஏற்றம் நடைபெற்று வருகிறதா என்று கேள்வி எழுப்பிய வானதி, தேவையில்லாமல் மத்திய அரசை குறை சொல்ல கூடாது. மத்திய அரசு பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது. அதற்கெல்லாம் மத்திய அரசை பாராட்டவில்லை. ஆனால் நீங்கள் விலை ஏற்றி விட்டு மத்திய அரசை சொல்ல கூடாது என்று கூறினார்.