ஆண்டுக்கு 6 சதவீத மின் கட்டண உயர்வா?…திமுக கூட்டணி கட்சி போர்க்கொடி!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 8:37 pm

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மின் கட்டணம் உயர்வு : எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் “இந்தக் கட்டண உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். ஷாக் தரும் இந்த உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

சாமானிய மக்கள், வியாபாரிகள், தொழில் செய்வோர் மத்தியிலும் இந்த உயர்வு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

திமுக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு இதுதான் :

வீடுகளில் 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசும் அதிகபட்சமாக 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 565 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல வீடுகளில் இரண்டு மாதங்களில் 300, 400, 500, 600,700, 800 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கும் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் 801 முதல் 1000 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாயும்,
1000 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 11 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம் 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று கருதுபவர்கள் மின்வாரியத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டுத் தரலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சியினர், தங்களது பலத்த எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 13 கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் இந்த கட்டணம் உயர்வுக்கு எதிராக உடனடியாக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது. அது தோழமையின் சுட்டுதல் என்பது போல அமைந்திருப்பது வேறு விஷயம்!

தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்
“தமிழகத்தில் மின் கட்டணம் 55 ரூபாய் முதல் 1130 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நியாயமற்ற செயல்

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.

மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழக அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயல்.

உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்னாச்சு?

ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிபடி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.

மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறு-குறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று கூறி இருக்கிறார்.

கருத்துக்கேட்பு கண்துடைப்பா?

“திமுக அரசு மின் கட்டணத்தை இந்த அளவிற்கு உயர்த்தும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் கோவை, மதுரை, சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய பின்பு, பொது மக்களின் கோரிக்கையின்படி அவர்களை திருப்தி அடையச் செய்யும் விதமாக ஓரளவு கட்டணத்தை மட்டுமே உயர்த்துவதுதான் மாநில அரசுகளின் வழக்கமான ஒன்றாக இருக்கும்.

மாறாக ஏற்கனவே திட்டமிட்டிருந்ததில் எந்த மாறுதலும் இல்லாமல் கட்டண உயர்வு அப்படியே அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது கண்துடைப்பு நாடகம் போலவே தெரிகிறது” என்று சமூகநல ஆர்வலர்கள் திமுக அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை 6% உயரும் மின் கட்டணம்

“இதில் வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால், தற்போது வீடுகளுக்கான மின் கட்டணம் சராசரியாக 25 சதவீதம் முதல் அதிக பட்சமாக 53 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி 2027-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
அறிவித்து இருப்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 55 முதல் 83 சதவீதமாக உயர்ந்துவிடும் என்பது நிச்சயம்.

தமிழக மின் வாரியம் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதால், இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. புதிய மின் கட்டணம் மூலம் மின் வாரியத்துக்கு 59,435 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என்று தமிழக அரசு கூறுகிறது.

மக்கள் மீது சுமையை வைப்பது சரியல்ல

கடந்த 25 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த இந்தக் கடனை அடுத்த 5 வருடங்களுக்குள் அடைக்க திமுக அரசு முடிவெடுத்து இருப்பதுபோல் தெரிகிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. மின்கட்டணத்தை சிறிதளவு உயர்த்தி, மின்வாரியத்திற்கு உள்ள கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயற்சிப்பதுதான் சரியானதாக இருக்கும்.

ஏற்கனவே சொத்துவரி 150 சதவீதம் வரை அதிகரிக்கபட்ட நிலையில், அதிலும் ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு இருக்கும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருந்தார். அதனால் மக்களின் தலையில் தூக்க முடியாத அளவிற்கு மின் கட்டண சுமையை வைப்பது சரியான நடவடிக்கை அல்ல.

இத்தனைக்கும் நாங்கள் ஆட்சி வந்தால் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு எடுக்கப்படும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனால் ஸ்டாலின் ஆட்சியில் மின் கட்டண சுமை சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு மீது பழி

தமிழகம் முழுவதும் எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுதான், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று இப்போது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். ஆனாலும் இதற்கான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை. அதனால் மின்கட்டண உயர்வு என்பது தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சொத்துவரி உயர்வுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என்று
பழி போடக்கூடாது.

ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து விட்ட தமிழக மக்கள் இப்போதுதான் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர். அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், இன்னொரு பலத்த தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது.

வாயை திறக்காத கூட்டணி கட்சிகள்!

அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எதற்காகவெல்லாம் தீவிர போராட்டங்களை நடத்தினவோ அதையெல்லாம்
இப்போது அடியோடு மறந்து விட்டன. அதுவும் குறிப்பாக விவசாயிகளைப் பாதிக்கும் சென்னை -சேலம் 8 வழி சாலை திட்டம், பரந்தூர் சர்வதேச விமான நிலைய பிரச்னை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குழைவு, கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை பற்றி காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் மூச்சே விடவில்லை.

சமூகப் போராளிகள் என்ற பெயரில் கடந்த ஆட்சி காலத்தில் கொந்தளித்த நடிகர்கள், பொதுநல ஆர்வலர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள், ஓடி ஒளிந்தார்கள் என்பதும் தெரியவில்லை. உண்மையிலேயே மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளும், சமூக போராளிகளும் அமைதி காப்பது அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  • Ajith race team celebration video நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!