திருப்பூரை காலி செய்த 60 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள்… காரணத்தை சொன்ன அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2024, 5:51 pm
திருப்பூரை காலி செய்த 60 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள்… காரணத்தை சொன்ன அண்ணாமலை!
வேலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “பிரதமரின் வீடு திட்டம் மூலமாக 26,764 பேருக்கு வீடு, 2,12,528 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,12,423 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,09,604 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 14,256 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 59,603 விவசாயிகளுக்கு PM Kisan கௌரவ நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடனுதவி 6,478 கோடி ரூபாய் என வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்களால், லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர்.
திருப்பூர் பகுதியில் மட்டும் 60,000 உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், திரும்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக, திமுக தலைவர்கள், வடநாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தற்போது, வேலைக்கு ஆள் கிடைக்காமல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்படும்.
இது தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்கள் வெளியேற்றத்தை குறைக்க என்ன வழி என்பதை திமுக அரசு ஆலோசிக்க வேண்டும்.
தமிழக அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடக்கிறது. இவர்களால் எப்படி தமிழகத்தை முன்னேற்ற முடியும்? ஆட்சிக்கு வந்து 31 மாதங்களில், அனைத்திற்கும் விலையையும், வரியையும் ஏற்றி விட்டார்கள்.
மத்திய அரசு வழங்கும் நிதியில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறதே தவிர, திமுக அரசு பெறும் வரிப்பணம் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்து நிதி கொடுத்தது மத்திய அரசு. அதை முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.
ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியின் விலையில் 32 ரூபாய் மத்திய அரசும், 2 ரூபாய் மாநில அரசும் கொடுக்கிறது. ஆனால் அதையும் திமுக கணக்கில் எழுதிக் கொள்வார்கள்.
அறுபது ஆண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் ஜாதி, ஊழல், குடும்ப, அடாவடி அரசியல் இவை நான்கையும் ஒழிக்க ஒரே மருந்து நரேந்திர மோடி. அவரது ஊழலற்ற நல்லாட்சியை எதிர்த்து, சுயநலவாதிகள் இந்தி கூட்டணி தொடங்கினார்கள்.
இன்று, இந்தி கூட்டணி சிதறிக் கொண்டிருக்கிறது. நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த நக்சல் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, ராமர் கோவில், ஆர்டிகிள் 370 என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.
வரும் 2028 ஆம் ஆண்டு, உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும், 2047 ஆம் ஆண்டு, முதல் பொருளாதார நாடாகவும் நமது நாடு முன்னேறும்.