72 மணி நேரம் கெடு…. நடவடிக்கை எடுக்கலைனா கோட்டையை முற்றுகையிடுவோம் : அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 2:43 pm

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது உயர்த்தியதிலிருந்து 50 சதவிகிதம் விலைக் குறைப்பு செய்துவிட்டு, மாநிலங்களை விலைக் குறைப்பு செய்யுமாறு அறிவுரை கூறுகிறார்கள். இது கூட்டாட்சியா? என பதிவிட்டிருந்தார்.

மேலும்,பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

அதன்படி, வரி குறைந்த பிறகும் 2014ஆம் ஆண்டை விட மத்திய அரசின் வரிகள் அதிகமாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டைவிட பெட்ரோல் டீசல் மீதான வரி 10.42ம், டீசல் மீதான வரி 12.23 அதிகமாக உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு அறிவிப்பின் மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.800 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கோட்டை முற்றுகையிடப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அரசானது பெட்ரோல், டீசல் விலையை தற்போது மீண்டும் குறைத்துள்ளது.

இதன்மூலம்,கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.14-ம், டீசல் விலை ரூ.17-ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மத்திய அரசுக்கு 1,10,000 கோடி இழப்பு ஏற்படும்.

அதைப்போல, திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.இதனை 72 மணி நேரத்திற்குள் இந்த அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்,போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை விடுத்துள்ள எச்சரிக்கை அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!