நீட் விலக்கு குறித்து வரும் 9ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம்? மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2022, 11:52 am
சென்னை : நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை என்றும் ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம் எனவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.
நீட் விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமலேயே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நீட விலக்கு மசோதா குறித்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் வரும் 9ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேதி குறித்து சபாநாயகர் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.