விவஸ்தையே இல்லையா? அதிக மது விற்பனைக்கு சான்றிதழா? ஒரே வார்த்தையில் அதிரடி கொடுத்த அன்புமணி ராமதாஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2023, 8:52 pm
கரூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தததையடுத்து திரும்பப் பெற்றுள்ளது. இந்திய குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது.
எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடும்.
குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார். மறுபுறம் மதுவிற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது?
டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.