மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு ஆந்திரா TO ஒடிசாவுக்கு நடந்தே சென்ற பரிதாபம்.. தடுத்து நிறுத்தி போலீசார் செய்த காரியம்!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 11:16 am

திருப்பதி: சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவியின் உடலை ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு தோளில் சுமந்து நடந்து சென்று கொண்டிருந்த நபருக்கு போலீசார் உதவிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் சரோடா கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சாமுலு. அவருடைய மனைவி இடுகுரு(30). உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மனைவிக்கு ஒடிசா மாநிலத்தில் தேவையான சிகிச்சையை சாமுலுவால் அளிக்க இயலவில்லை.

எனவே, மனைவியை அழைத்து கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வந்த சாமுலு, அவரை அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு இடுகுரு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே, மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாத மனைவி அழைத்து கொண்டு பேருந்தில் செல்ல இயலாது என்பதால், மனைவியுடன் அவர் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் சென்று கொண்டிருந்தார். விஜயநகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இடுகுரு மரணம் அடைந்து விட்டார்.

எனவே, ஆட்டோ ஓட்டுநர் நடுவழியில் மனைவி உடலுடன் சாமுலுவை இறக்கி விட்டு சென்று விட்டார். மொழி தெரியாத ஊரில், தெரிந்தவர்கள், நண்பர்கள் இல்லாத சூழலில் ஆம்புலன்ஸை வாடகைக்கு அமர்த்த தேவையான பணமும் இல்லாமல் தவித்த சாமுலு, மனைவி உடலை தோளில் சுமந்து ஒடிசா மாநிலத்தை நோக்கி சாலையில் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் என்ன நடந்தது என்று விசாரித்து ஒடிசாவில் உள்ள சாமுலுவின் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அதன் பின் ஆம்புலஸ் மூலம் சாமுலுவுஙன மனைவி உடலை அவருடைய சொந்த ஊர் வரை போலீசார் கட்டணம் ஏதும் இன்றி அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!