இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்ட புதுக் கணக்கு : இபிஎஸ் ஓபிஎஸ்சை சந்தித்த பின் ஒரே ஒரு வார்த்தையில் பதில்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 10:58 am

எடப்பாடி பழனிசாமியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய அண்ணாமலை தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த சூழ்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது அதிமுக தரப்பில் ஜெயக்குமார் உடன் இருந்தார்.

அதேவேளை, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் ரவி உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் காரில் வெளியேறிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் சில வினாடிகள் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், கமலாலயத்தில் (பாஜக தலைமையிடம்) பேசுவோம்.

ஒரு மணி நேரம் கொடுங்கள் கமலாலயத்தில் நாங்கள் சந்திக்கிறோம்’ என்றார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். கிரீன்வெஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரை அண்ணாமலை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஒன்றிணைந்து செயல்படவேண்டுமென பாஜக அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளர் தென்னரசு இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிருந்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 328

    0

    0