எல்லை தாண்டிய கே.எஸ் அழகிரிக்கு புதிய தலைவலி! 2024 தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா?…

Author: Udayachandran RadhaKrishnan
26 நவம்பர் 2023, 7:26 மணி
KS
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதை கட்சியின் மேலிடம் எப்படி தீர்த்து வைக்கப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாகவும் எழுந்துள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து வரும் கே எஸ் அழகிரிக்கு தென் மாவட்டங்களில் உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் நியமித்த வட்டார தலைவர்களை, அவர் அதிரடியாக நீக்கியதுதான் இப் பிரச்சனைக்கு மூல காரணமே.

இது தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்ற ரூபி மனோகரன் ஆதரவாளர்களை, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை பெறும் அளவிற்கு கடுமையாக தாக்கி மூவரைப் படுகாயப்படுத்தவும் செய்தனர்.

இதனால் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போனார்கள். ‘கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய அழகிரியை, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் ஒருபோதும் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று சபதமும் எடுத்தனர்.

இதனால் பயந்துபோன கே.எஸ் அழகிரி அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கு தனியாகவோ, தனது ஆதரவாளர்களுடனோ செல்வதையே தவிர்த்து வருகிறார்.
அப்படியே சென்றாலும் கூட விருதுநகர் வரை செல்வதுதான் அவரது வழக்கம். மறந்தும் கூட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் பக்கம் அவர் தலை வைத்தே படுப்பதில்லை. டெல்லியில் இருந்து யாராவது மேலிட காங்கிரஸ் தலைவர்கள் வந்தால் மட்டுமே அவர்களுடன் தென் மாவட்டங்களுக்கு துணிச்சலுடன் சென்று வருவார்.

இந்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி பயிற்சி பாசறை கூட்டம் மிக அண்மையில் திசையன்விளையில் நடந்தது. இதில் கே எஸ் அழகிரி, எம்பிக்கள் மாணிக்கம் தாக்கூர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி அவருடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ரூபி மனோகரனும் இதில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருநெல்வேலியிலுள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக மாநில காங்கிரஸ் இணைச்செயலாளர் கமலா,
இணை பொதுச்செயலாளர் குளோரி தலைமையில் திரண்ட 60க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கருப்பு சேலை அணிந்து திடீரென்று தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அழகிரி மீதான கடுங் கோபத்தை அவர்கள் ஆவேசமாக கொட்டவும் செய்தனர்.

“தமிழக காங்கிரஸ் தலைமை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவை தொடர்ந்து புறக்கணிக்கிறது. பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி பதவிகளும் அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வருகிறார். அவரை உடனே மாற்றவேண்டும். இதுபோல் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரையும் நீக்க வேண்டும்” என்று எழுப்பிய முழக்கம் தான் அழகிரிக்கு தலைவலி தருவதாக அமைந்து உள்ளது.

தனக்கு எதிராக மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலேயே மகளிர் அணியினர் தர்ணாவில் ஈடுபட்டதை கேள்விப்பட்ட கே எஸ் அழகிரி திருநெல்வேலிக்கே வரவில்லை. தவிர அங்குள்ள ஹோட்டலில் தங்கினால், தனக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று கருதி நேராக திருக்குறுங்குடி சென்று, அங்குள்ள தனியார் பங்களாவில் தங்கினார். பின்னர் அங்கிருந்தவாறே திசையன்விளைக்கு சென்று பூத் கமிட்டி பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கே எஸ் அழகிரி கலந்து கொண்டிருக்கிறார்.

இதைவிட மிக வேடிக்கையான விஷயம் என்னவென்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் நீங்கள் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான எந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றாலும் அங்கு குண்டு வெடிக்கும் என்று உள்ளூர் காங்கிரஸை சேர்ந்த அன்புரோஸ் என்பவர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு மிரட்டல் விடுத்தும் இருக்கிறார். அழகிரியின் ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தும் உள்ளனர், என்பதுதான்.

“தமிழக காங்கிரஸில் 8 எம்பிக்களும், 18 எம்எல்ஏக்களும் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே கே எஸ் அழகிரிக்கு எதிராக இருப்பதால்தான் இது போன்ற நெருக்கடியான நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

“தமிழக காங்கிரசில் தற்போதே ஏழுக்கும் அதிகமான கோஷ்டிகள் இருக்கின்றன. இவர்கள் கட்சியை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை விட எந்த நேரமும் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஜால்ரா தட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உதயநிதி தும்மினால் கூட ஆஹா எவ்வளவு அழகாக தும்முகிறார் என்று பாராட்டும் அளவிற்கு அவர்களுடைய நிலைமை மாறிவிட்டது, என்கிறார்கள். அதுவும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கே எஸ் அழகிரி உள்ளிட்ட எல்லா முன்னாள் தலைவர்களுமே ஆளும் கட்சி எடுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஆதரிக்கவே செய்கிறார்கள். பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மறந்தும் கூட கண்டிப்பதில்லை.

ஆனால் தேர்தல் நெருங்கினால் மட்டும் இவர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் இன்னும் வளரவில்லையே என்ற கவலை வந்து விடுகிறது. 2024 தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்போம் என்பதை கூட தமிழக காங்கிரஸ் தலைவர்களால் இதுவரை தெளிவாக கூற முடியவில்லை.

மாறாக டெல்லியில் சோனியாவும், ராகுலும் திமுகவிடம் 15 தொகுதிகளை எப்படியும் கேட்டுப் பெறுங்கள் என்று உத்தரவிட்ட பிறகுதான் கேஎஸ் அழகிரியே மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் அதைப் பற்றி வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் அதே கூட்டத்தில் பேசிய பல மாவட்ட தலைவர்கள் கடந்த தேர்தலில் கிடைத்தது போல ஒன்பது தொகுதிகளைத்தான் திமுக ஒதுக்கும். அதிலும் கூட கமல் கட்சிக்கு நாம்தான் ஒரு சீட்டை தாரை வார்க்க வேண்டிவரும் என்று கூறுகிறார்கள்.

அதாவது திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல அவர்கள் பேசுகின்றனர். நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின்தான். அவருக்குத்தான் கமல் கட்சிக்கு எம்பி சீட்டு ஒதுக்குவதற்கான பொறுப்பும் இருக்கிறது. அது போன்றநிலையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்படி பேசுவது அழகிரிக்கு அதிர்ச்சி அளிக்கவேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவும் இல்லை.

ஆனால் கே எஸ் அழகிரியை நீக்கிவிட்டு வேறு யாரை மாநில தலைவராக நியமித்தாலும் திமுகவிடமிருந்து கடந்த தேர்தலை விட ஒரு எம்பி தொகுதி கூட கூடுதலாக பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலை.

தவிர அதை திமுகவும் விரும்பாது. ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மட்டுமே குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறார். அப்போதுதான் தேசிய அளவில் திமுகவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், ஒருவேளை இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் அதிகாரமிக்க மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற முடியும் என்றும் அவர் கணக்கு போடுகிறார். இதனால் 2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகளை திமுக ஒதுக்கினாலே காங்கிரசுக்கு அது பெரும் வரப்பிரசாதமாகத்தான் இருக்கும்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேருமே திமுக தொண்டர்கள் போல ஆகிப் போனதால் யாரை புதிய தலைவராக நியமித்தாலும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. எனவே அழகிரியின் தலைவர் பதவி தப்புவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைமையில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 275

    0

    0