சொன்னபடி பெண்களுக்கு ரூ.1,000 தரலைனா… நானே அதிமுகவுக்கு ஓட்டு போடுகிறேன்… ஆ.ராசா அதிரடி..!!!
Author: Babu Lakshmanan14 May 2022, 11:30 pm
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பது தொடர்பான தேர்தல் வாக்குறுதி குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அதிரடியாக பேசியுள்ளார்.
சென்னையில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது :- ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் சொன்னாரே என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நீட் மசோதாவை தமிழக ஆளுநர் நிராகரித்தார். மீண்டும் அதை தமிழக ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை பணிய வைத்தார். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை முதல்வர் அனுப்ப வைத்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
அதேபோல, பெண்களுக்கு உரிமைத் தொகை எப்போது தருவீர்கள்..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஐந்து ஆண்டு கழித்து தேர்தல் நடக்கும்போது திமுக தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு, ‘முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ரூ.1000 தருகிறேன் என்று சொன்னார். ஆனால், தரவில்லை. அதனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி கேட்கட்டும். அப்போது நானே இரட்டை இலைக்கு வாக்களிக்கிறேன், எனக் கூறினார்.