இந்துக்கள் குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : திசை திருப்பும் நாடகமா?…

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 9:14 pm

திமுக எம்பியான ஆ ராசா சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவருடைய இதுபோன்ற பேச்சு பல நேரங்களில் திமுக தலைமைக்கு தலை குனிவைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது.

இபிஎஸ் தாயார் குறித்து இழிவாக பேசிய ஆ.ராசா

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்த அவர் மிகவும் இழிவாக பேசியது கடும் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளானது.

நாலாபக்கமும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் எடப்பாடி பழனிசாமியிடம், ஆ ராசா மன்னிப்பும் கேட்க வேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் பல நேரங்களில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருக்கிறார். அதற்காக அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டும் இருக்கிறார்.

தனித் தமிழகம் கேட்ட ஆ.ராசா

அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ஒரு மாநாட்டில் ஆ ராசா மாநில சுயாட்சி பற்றி பேசும்போது பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக தெரிவித்த ஒரு கருத்து தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பாஜக கடும் கண்டனமும் தெரிவித்தது.

இந்த நிலையில்தான் அவர், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது இந்துக்களை கடுமையாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்துக்கள் குறித்து சர்ச்சை

“இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்?… என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால்தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்”என்று ஆ ராசா பேசிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை கண்டனம்

இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தார். துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஆ ராசாவை கைது செய்யவேண்டும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கோரிக்கையும் விடுத்தார்.

அதேநேரம் யாரும் எதிர்பாராத விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணனும், எந்தக் கட்சியையும் சாராத பிரபல சமூக நல ஆர்வலரான நடிகை கஸ்தூரியும், இந்துக்களை அவதூறாக விமர்சித்த திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து பொங்கி எழுந்து குரல் எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம்

அமெரிக்கை நாராயணன் தனது ட்விட்டரில் பதிவில் ஆ.ராசா சூத்திரர்கள், பஞ்சமர்கள் குறித்து பேசியுள்ள வீடியோ கிளிப்பையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், “இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த திமுகவின் ஆ.ராசா போன்றோரின், பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கே.எஸ்.அழகிரி, உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் ராசாவை தமிழக முதலமைச்சர் கைது செய்ய வேண்டுகிறேன்” என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆ ராசாவுக்கு எதிராக கொந்தளிக்க நடிகை

நடிகை கஸ்தூரியும், ஆ ராசாவை வறுத்தெடுத்து இருப்பதுடன் திமுக அரசு அடுத்தடுத்து கட்டணங்களை உயர்த்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு?…” என்று கிண்டல் செய்துள்ள நடிகை கஸ்தூரி, அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் விழா ஒன்றில் மலர் மாலை அணிந்து பூஜை பொருட்களை பய பக்தியுடன் கைகளில் எடுத்துச் செல்லும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில் ஸ்டாலின் குடும்பத்தினர் சிலரும் துர்காவின் பின்னால் கைகளில் பூஜை பொருட்களுடன் நடந்து செல்வதும் பளிச்சென்று தெரிகிறது.

மேலும் நடிகை கஸ்தூரி, “ஹா…ஹா…தண்ணி வரி, சொத்துவரி ஏத்துனதுக்கு Gas, Petrol ஒன்றியம்னு இங்கே உருட்டுற உபிக்களின் விசுவாசத்தை பாராட்டத்தான் வேண்டும். Gas, Petrol விலையை கண்டித்த முதல் ஆள் நான்தான். நான் கட்சி சார்பாளர் இல்லை. மனசாட்சியுள்ள ஒரு தமிழ்க்குடிமகள்.

ஏ‌ற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க பால் பொருள் விலை, பருப்பு விலை எல்லாம் ஏறியாச்சு. மறுபடியும் Electricity கட்டணம் ஏத்திட்டாங்க. அடுத்தது எதை ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது” என்று கேள்வி கேட்டு தமிழக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.

ஆ ராசா பதிலடி

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அமெரிக்கை நாராயணன் எழுப்பிய கேள்விக்கு, ஆ.ராசா தனது ட்விட்டர் பதிவில், “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-
கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?” என்று கேட்டு இருக்கிறார்.

“இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த விவகாரத்தில் தன்னை விமர்சித்த எந்தவொரு எதிர்க்கட்சி தலைவருக்கும் பதிலளிக்காத ஆ ராசா, காங்கிஸ் தலைவரான அமெரிக்கை நாராயணனுக்கு மட்டும் விளக்கம் அளித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பயந்து போன ஆ.ராசா

“ஏனென்றால் அமெரிக்கை நாராயணன், நீங்கள் ஏன் ராசாவை கண்டிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியையும் கட்சியின் மற்ற தலைவர்களையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டிருக்கிறார். நமது கட்சியிலும் பெருமளவில் இந்துக்கள் இருக்கிறார்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?…கட்சியின் மேலிடத்திற்கு இதுபற்றி தெரிவிப்பீர்களா?… மாட்டீர்களா?… ஆ ராசா மீதான 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு காரணமாகத்தானே காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு நம்மால் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அது உங்களுக்குத் தெரியாதா? என்ற கேள்விகளைத்தான் கே எஸ் அழகிரிக்கு, அமெரிக்கை நாராயணன் மறைமுகமாக எழுப்பியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

இதனால்தான் ஆ ராசா, அவருக்கு மட்டும் பயந்துபோய் பதில் அளித்திருக்கிறார், போலும்!இந்த விளக்கத்திலும் கூட இந்துக்கள் பற்றி, தான் அவதூறாக பேசிய வார்த்தைகளை திமுக எம் பி ஆர் ராசா மிகவும் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டதை காண முடிகிறது.

திருமாவளவன் மனுஸ்மிருதி சர்ச்சை

நடைமுறையிலேயே இல்லாத மனு ஸ்மிருதியை தேடிப்பிடித்து ஆ ராசா பேசியிருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே இந்துக்களால் பார்க்கப்படும். முன்பு ஒருமுறை விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் இப்படி பேசி சர்ச்சையை கிளப்பிவிட்டு கடைசியில் நான் மனு ஸ்மிருதியில் இருப்பதைத்தான் கூறினேன் என்று பல்டி அடித்தார். அதே போல் தேவையில்லாத விஷயங்களை பேசி பிரச்சினையை பூதாகரமாக்குவதுதான் ஆ. ராசாவின் முதல் வேலையாக இருப்பதுபோல் தெரிகிறது.

அதே சமயம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கின்றனர் என்று அவ்வப்போது கூறி வருவது அவருடைய நினைவிற்கு வந்திருக்கும். தனது பேச்சு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் தீவிர பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படலாம், அது காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை தடுக்கலாம் என நினைத்து ஆ ராசா காங்கிரஸுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார் என்று கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

மின் கட்டண உயர்வை மறைக்க நாடகம்

மேலும் கடுமையான சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக திமுக அரசு மீது தமிழக மக்களுக்கு எழுந்துள்ள கடும் அதிருப்தியை திசை திருப்பும் விதமாக இந்துக்கள் பற்றி அவர் விமர்சித்து இருக்கலாம் என்று கருதவும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் நடிகை கஸ்தூரி தனது பதிவுகளில் மக்களைப் பாதிக்கும் திமுக அரசின் விலை உயர்வு குறித்து பட்டியல் போட்டு காட்டி இருப்பதையும் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை!!

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியது கூட கடுமையான கட்டண உயர்வில் இருந்து தமிழக மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக இருக்கலாம்.

150 சதவீத சொத்து வரி அதிகரிப்பையும், 53 சதவீத மின் கட்டண உயர்வையும் தமிழக மக்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது அந்த பணச்சுமை மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நிற்கும். அது எதிர் வரும் தேர்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாதகமாகவும் அமையலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!