பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி… அவர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் : எஸ்வி சேகர் திடீர் அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2023, 10:53 am
பாஜக முன்னாள் நிர்வாகியான எஸ்.வி. சேகர் தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், எஸ்.வி. சேகர் புதிய கட்சித் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் எஸ்.வி. சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு முன்செய்தியாக ஒன்று சொல்கிறேன். தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடங்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் பிராமணர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்று கூறினார்.
எங்கள் நோக்கம் வெற்றி அல்ல. பிராமணர்களின் வாக்குகளை ஒன்றிணைத்து, பிராமணர்களின் பலத்தை நிரூபிப்பதுதான். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சிகள் வருங்காலத்தில் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் என்றும் சேகர் சொன்னார்.
புதிய கட்சித் தொடங்க பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்தான் உத்வேகம் அளித்தார் என்றும் சேகர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சேகர், பிராமணர்கள் என்றவுடன் டிவிஎஸ் ஐயங்கார், எஸ்வி சேகர், சோ போன்றவர்களையே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பிராமணர்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்று கூறினார்.