பல்பு வாங்கிய டார்ச் லைட்! கமல் நடத்தியது நாடகமா?…

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 7:28 pm

திமுக கூட்டணியில் நடிகர் கமல் ஹாசன் இடம் பெறுவாரா?மாட்டாரா?…அவர் கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்காவிட்டால் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா?… அல்லது தேர்தலை புறக்கணிக்குமா? என்ற கேள்விகள் கடந்த சில வாரங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு எங்கள் கட்சி தயாராக இருக்கிறது என்று கமல் வெளிப்படையாக அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அவரை திமுக கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான். தவிர அவரை தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திமுக எந்த ஆர்வமும் காட்டவில்லை.

கடந்த ஜனவரி மாத இறுதியில் நடிகர் கமல் எப்படியாவது திமுக கூட்டணியில் இணைந்து கோவை, தென் சென்னை தொகுதிகளை கேட்டு வாங்கி விடவேண்டும் என்று தானாக முன்வந்து கூட்டணி ஆசையை வெளிப்படுத்தினார்.

அதற்காக 2019 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தனது கட்சிக்கு நான்கு சதவீத ஓட்டுகள் கிடைத்ததையும், கோவை, தென் சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகள் கிடைத்ததையும் பட்டியல் போட்டார்.

ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியில் அரை டஜனுக்கும் மேலான கட்சிகள் இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்த்துக் கொண்டால் மற்றவர்களுக்கு தொகுதிகளை பங்கிட்டு கொடுப்பது இடியாப்ப சிக்கல் ஆகிவிடும் என்பது திமுக தலைமைக்கு நன்றாகவே தெரியும்.
இதனால்தான் திமுக எந்த கருத்தையும் வெளிப்படையாக
தெரிவிக்கவில்லை.

இது குறித்து அப்போது திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு குழுவின் தலைவர் டி ஆர் பாலு எம்பியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில் மிகவும் வேடிக்கையாக இருந்தது.
“திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டும் என்றாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம்” என்று கமலுக்கு பலத்த ஷாக் கொடுத்தார்.

இதன் மூலம் நீங்கள் நாடாளுமன்ற தொகுதி எம்பி சீட்டுகளை ஒரு போதும் எங்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்பதை டி. ஆர். பாலு பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தும் இருந்தார். ஆனாலும் நடிகர் கமல் மனம் தளரவில்லை, அமைச்சர் உதயநிதி சினிமா வட்டாரத்தில் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் மூலம் தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தார்.

திமுக எப்போது அழைக்கும் என்று காத்திருந்த கமலுக்கு பிப்ரவரி 9ம் தேதி விடுக்கப்பட்ட திடீர் அழைப்பு ஜாக்பாட் போல அமைந்தது. உடனடியாக தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் அறிவாலயத்திற்கு ஓடோடினார்.

அங்கிருந்த அமைச்சர் உதயநிதி அவரை வரவேற்று அழைத்துச் சென்றபோதே மக்கள் நீதி மய்யம் எதையோ மிகப்பெரிதாக சாதிக்கப் போகிறது என்று அரசியலில் உள்ளோர் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே வெளியே வந்த கமல், முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார். அங்குதான் மிகப்பெரிய ட்விஸ்ட்டே இருந்தது.

“மக்கள் நீதி மய்யம் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்த தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து கமல் பிரசாரம் செய்வார். 2025ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் ராஜ்யசபா எம்பி சீட் மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது” என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், “நாடாளுமன்ற தேர்தலில், நானும் எனது கட்சியும் போட்டியிடவில்லை.திமுக கூட்டணிக்கு என்னுடைய அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டிற்காக ஒன்று சேர்ந்துள்ளோம்” என சுருக்கமாக முடித்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது அவர் அங்கிருந்து நழுவி விட்டார்.

திமுக கூட்டணியில் எப்படியாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியை வாங்கி போட்டியிட்டு விடலாம் என்று மனக்கோட்டை கட்டி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சி தருவதாக இருந்தது.

தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்தல்களை சந்தித்த நடிகர் கமல் இப்போது மட்டும் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது ஏன்? இதற்காகவா அவர் 2018ல் கட்சியை தொடங்கினார்?… என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

இன்னும் சிலர் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரசை முழுமையாக நம்பி இருந்தது மிகப்பெரிய தவறு. ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் பங்கேற்ற போதே 2024 தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அவர் போட்டியிட விரும்புகிறார் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. அந்த நேரத்திலேயே அவர் அமைச்சர் உதயநிதியிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி திமுகவிடம் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் அதைக் கவுரவ குறைச்சலாக கருதி முழுக்க முழுக்க காங்கிரசை மட்டுமே நம்பி இருந்தார். எப்படியும் காங்கிரஸ் தனக்கு ஒரு தொகுதியை திமுகவிடம் வாங்கி கொடுத்து விடும் என்றும் கமல் கணக்கு போட்டார். இதற்காக தேர்தல் கமிஷனிடம் போராடி தனது கட்சியின் தேர்தல் சின்னமான டார்ச் லைட்டையும் வாங்கிவிட்டார். ஆனால் என்ன பிரயோஜனம் காங்கிரசும் அவரை கை கழுவி விட்டது. திமுகவும் கடைசி வரை அவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் ராஜ்ய சபா எம்பி சீட்டை மட்டும் கொடுத்து ஒரே அமுக்காக அமுக்கி விட்டது.

அதுவும் இந்த பதவியை பெறுவதற்கு கமல் இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும். அப்போதும் கூட அவர் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டால் திமுக அடையாளத்துடன்தான் நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கும். இது முழுக்க முழுக்க அவருடைய சுயநலத்தையே காட்டுகிறது.

தவிர கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை எப்படி ஏமாற்றலாம் என்று கட்சியின் தலைவர் கமல், கலைத்துறையின் அவருடைய சக நண்பரும், அமைச்சருமான உதயநிதியுடன் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் போலவே இது தெரிகிறது.

அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கமல், “நான் கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை, சோகத்தில் வந்தேன். நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? அப்படி யாரும் இல்லை. எல்லோருமே பகுதிநேர அரசியல்வாதிகள்தான்” என்று கொந்தளித்து இருந்தார்.

ஆனால் இப்போது பகுதி நேர அரசியல்வாதிக்கும் கீழாக அவர் சென்று விட்டார். சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் கமல் அரசியலில் ஜீரோ ஆகிவிட்டார் என்பதே எதார்த்தமான உண்மை.
தேர்தல் கமிஷனில் போராடி பெற்ற டார்ச் லைட் சின்னமும் பல்பு வாங்கியதுதான் மிச்சம். இதுக்கு பேசாம அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று கமல் அரசியல் கட்சி தொடங்கியதை பலரும் கேலியாக பேசும் நிலைமைக்கு அவருடைய அரசியல் வாழ்க்கை ஆகிவிட்டது. அதற்கு பேசாமல் கட்சியை கமல் திமுகவுடன் இணைந்து விடலாம்.

ஏனென்றால் 2018ல் கட்சி தொடங்கிய போது அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இன்று திமுகவில்தான் இருக்கின்றனர். அதனால் கமல் தனது கட்சியை திமுகவுடன் இணைப்பதில் எந்தத் தவறும் கிடையாது என்பதும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் புலம்பலாக உள்ளது.

அதேநேரம் நடிகர் கமலை விட திமுகவின் தீவிர விசுவாசியாக இருக்கும் வைகோ கூட தனது கட்சிக்காக ஒரு நாடாளுமன்ற தொகுதியை அடம்பிடித்து வாங்கி விட்டார். மதிமுக பம்பரம் சின்னத்தில் களம் காண போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் கமலை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்