கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்பம்.. முன்னாள் டிஎஸ்பிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2024, 7:11 pm
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டு டிஎஸ்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.