சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி… நேரடி நியமன முறை ரத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 7:39 pm

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது.

இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நேரடி பணி நியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும்.

நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, அவரது பதிவில், “இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. 50% இட ஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதியை நிலை நாட்டுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!