புதுப்புரளியா இருக்கு.. என்ன பிரதமரே தோல்வி பயமா? விடியல் பயணம் மீது வீண்பழியா? CM ஸ்டாலின் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 10:21 am

புதுப்புரளியா இருக்கு.. என்ன பிரதமரே தோல்வி பயமா? விடியல் பயணம் மீது வீண்பழியா? CM ஸ்டாலின் கண்டனம்!

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில் 4 கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

தென்மாநிலங்களில் தேர்தல்கள் நிறைவுபெற்றதை அடுத்து, தற்போது வடமாநிலங்களில் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் நிறைவு பெற்றாலும், மாற்றுக்கட்சிகளின் மீதான விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் முன்வைக்க தவறுவதில்லை.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் செய்லபடுத்தப்பட்டு வரும் இலவச பேருந்து பயணம், பெண்களுக்கான மாதந்தோறும் உதவி தொகை போன்ற திட்டங்கள் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் விமர்சனம் செய்கிறார் என கூறி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

அவர் இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில், தோல்வி பயத்தால், பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே பிரதமர் மோடி, ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டங்களின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கிறார் என்றும்,

இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவான பிரதமர் என்பதையே மோடி மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும் வகையில் பிரச்சாரம் செய்கிறார் என்றும், ஜூன்-4ஆம் தேதி இந்தப் பொய்கள் அனைத்தும் உடைபடும் என்றும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெரும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் , பாஜக அரசின் பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி.

கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தைப் எதிர்க்கிறார்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டமான இலவச பேருந்து பயண திட்டம் பெண்களுக்குப் பலவகைகள் பலன் அளித்துள்ளது.

ஆனால் , பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளியை கிளப்பி இருக்கிறார் பிரதமர் மோடி.

2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர பிரதமர் கூறியபடி அது குறையவில்லை.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, நிதி தராமல் அத்திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க: என்னை பற்றி விமர்சனம் செய்தவர்.. சவுக்கு சங்கரை கைது செய்தது தப்பில்லை..கையை உடைத்தது தப்பு!!

பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட R.S.S பின்புலத்திலிருந்து வந்த பிரதமர் என்பதால் பெண்களின் முன்னேற்றம் கண்டு பயப்படுகிறார். பா.ஜ.க.வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும். இந்தியா கூட்டணி வெல்லும் என தனது கண்டன செய்தி குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!