சென்னையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் : மழை வெள்ளத்தில் மறைந்திருந்ததால் விபரீதம்.. உஷார் மக்களே!
Author: Udayachandran RadhaKrishnan2 November 2022, 4:29 pm
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் துவங்கியது. வடகிழக்கு பருவமழையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
சென்னையில் விடிய விடிய பெய்யும் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடி, திருமங்கலம், கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, அம்பத்தூர், தொழிற்பேட்டை, அரும்பாக்கம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகளில் வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கினாலும் வடிந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதில்லை என மக்கள் குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் பெய்த மழையில் பாரெக்ஸ் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது
அங்கிருந்த பாதாள சாக்கடை தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் மழை நீரில் மூழ்கிய படி திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் ஓடி வந்த அப்பெண்ணை மீட்டு காப்பாற்றினர். பின்னர் பொதுமக்கள் முதலுதவி செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்க அனுமதித்தனர்.
சாலையில் தேங்கிய மழைநீரில் சாக்கடை தெரிய வாய்ப்பு இல்லை. எனவே மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். அமே சமயம் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளை மூட வேண்டும், எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.