ஆவின் ஐஸ் கிரீம்களின் விலை இன்று முதல் உயர்வு.. சொந்த செலவில் சூனியம் என பால் உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
2 March 2024, 12:01 pm

நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ் கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 65மி.லி. சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், 125 மி.லி. பால் வென்னிலா ரூ.28ல் இருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்
நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் இன்று முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இது போன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அத்துடன் பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்தி விட்டு களத்தில் இறங்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, என தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 195

    0

    0