ஆவின் பாலில் ரசாயனம் கலப்படம்… CM ஸ்டாலினின் வருகையால் மூடிமறைப்பு ; பால் முகவர்கள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 12:40 pm

ஆவின்‌ பாலில்‌ உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனம் கலப்பட விவகாரத்தில்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்‌ வந்து வழக்குப்பதிவு செய்ய வேணடும்‌ என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ராணிப்பேட்டை மாவட்டம்‌, ஜனகாபுரம்‌ கிராமத்திலிருந்து ஆவினுக்கு வழங்கப்படும்‌ பாலில்‌ இருந்து கொழுப்பு சத்தை திருடி அதற்குப்‌ பதிலாக பால்‌ பவுடர்‌, தண்ணீர்‌, வெண்ணெய்‌, காஸ்டிக்‌ சோடா கலப்படம்‌ செய்ததையும்‌, பாலில்‌ இருந்து கொழுப்பு சத்தை திருட அதனை பிரித்தெடுக்கும்‌ இயந்திரம்‌ வைத்திருந்ததையும்,‌ கடந்த சில வாரங்களுக்கு முன்‌ ஆவின்‌ விஜிலென்ஸ்‌ அதிகாரிகள்‌ கண்டுபிடித்து, மாதவரம்‌ மத்திய பால்‌ பண்ணையில்‌ உள்ள பகுப்பாய்வகத்தில்‌ ஆய்வுக்கு உட்படுத்தியதில்‌ கலப்படம்‌
நடைபெற்றது உறுதியானதும்‌, இந்த முறைகேட்டில்‌ ஆவின்‌ ஊழியரும்‌, அவரது தந்தையுமே ஈடுபட்டு ” வேலியே பயிரை மேய்ந்த தகவல்‌” கடும்‌ அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,‌ அதன்‌ அதிர்ச்சியில்‌ இருந்தே இன்னும்‌ முழுமையாக மீளாத போது, மீண்டும்‌ பாலில்‌ கலப்படம்‌ நடைபெற்றிருப்பதும்‌, அதுவும்‌ உயிருக்கு தீங்கிழைக்கும்‌ ரசாயனம்‌ கலப்படம்‌ செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடும்‌ அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ உள்ள தாமரைப்பாக்கம்‌, பரதராமி, காட்ராம்பாக்கம்‌, கே.வேலூர்‌, காவனூர்‌ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்‌ உள்ள பால்‌ உற்பத்தியாளர்களிடமிருந்து கிராம அளவிலான கூட்டுறவு சங்கங்கள்‌ மூலம்‌
கொள்முதல்‌ செய்யப்படும்‌ சுமார்‌ 25ஆயிரம்‌ லிட்டர்‌ பாலானது, மேற்கண்ட பகுதியில்‌ உள்ள பால்‌ மொத்த குளிர்விப்பான்‌ நிலையங்களில்‌ சேகரிக்கப்பட்டு, பின்னர்‌ அங்கிருந்து கொடைக்கல்‌ பால்‌ குளிரூட்டும்‌ நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, குளிரூட்டி பின்னர்‌ ஒருங்கிணைந்த வேலூர்‌ மாவட்டம்‌ சத்துவாச்சாரியில்‌ உள்ள ஆவின்‌ பால்‌ பண்ணைக்கு சுமார்‌ 15 ஆயிரம்‌ லிட்டர்‌ பாலும்‌, சென்னை, அம்பத்தூரில்‌ உள்ள ஆவின்‌ பால்‌ பண்ணைக்கு சுமார்‌ 10ஆயிரம்‌ லிட்டர்‌ பாலும்‌ தினசரி அனுப்பபட்டூ வருகிறது.

அவ்வாறு கொடைக்கல்‌ பால்‌ குளிரூட்டும்‌ நிலையத்தில்‌ இருந்து வேலூர்‌ மற்றும்‌ அம்பத்தூர்‌ ஆவின்‌ பால்‌ பண்ணைக்கு பாலினை அனுப்புவதற்கு முன்‌ குறிப்பிட்ட அளவு பாலினை திருடி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி, அதில்‌ “டிகிரி” என்று சொல்லக்‌ கூடிய “திடசத்து” மற்றும்‌ “கொழுப்பு சத்து” அளவை அதிகரிக்க “உயிருக்கு தீங்கிழைக்கும்‌ ரசாயனம்‌” கலப்படம்‌ செய்யப்படுவதாக ஆவின்‌ விஜிலென்ஸ்‌ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்‌ அடிப்படையில்‌ கடந்த 14.09.2023அன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்‌.

அவ்வாறு ஆவின்‌ விஜிலென்ஸ்‌ அதிகாரிகள்‌ கொடைக்கல்‌ பால்‌ குளிரூட்டும்‌ நிலையத்தில்‌ அதிரடி சோதனை நடத்திய போது அங்கே பணியாற்றும்‌ ஊழியர்களே பாலில்‌ உயிருக்கு தீங்கிழைக்கும்‌ ரசாயனத்தை கலப்படம்‌ செய்ததையும்‌, அதற்கு அவர்கள்‌ பயன்படுத்திய ரசாயனத்தையும்‌, ஏற்கனவே பயன்படுத்திய ரசாயன காலி டப்பாக்களையும்‌ பறிமுதல்‌ செய்து, அங்கிருந்த பாலின்‌ மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும்‌, பாலில்‌ கலப்படம்‌ செய்வதற்கான ரசாயனத்தை விற்பனை செய்த மருந்து கடையிலும்‌ அதிரடி சோதனை நடத்தியதாகவும்‌, பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ பங்கேற்க தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ செப்டம்பர்‌ 16, 17 தேதிகளில்‌ வேலூருக்கு வருகை தருவதால்,‌ இந்த கலப்பட விவகாரம்‌ வெளியே தெரியாமல்‌ இருக்க அப்படியே அமுக்கி வைக்கப்பட்டதாகவும்‌ வருகின்ற தகவல்கள்‌ உள்ளபடியே கடும்‌ அதிர்ச்சியளிக்கிறது.

அரசு நடத்தும்‌ கூட்டுறவு பால்‌ நிறுவனமான ஆவினாக இருந்தாலும்‌, தனியார்‌ நடத்தும்‌ பால்‌ நிறுவனங்களாக இருந்தாலும்‌ குழந்தைகள்‌ அருந்தும்‌ அத்தியாவசிய உணவுப்‌ பொருளாக விளங்கும்‌ பாலில்‌ கலப்படம்‌ செய்வது என்பதை கண்டிப்பாக ஏற்றுக்‌ கொள்ள முடியாது, அவ்வாறான செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ எவராக இருந்தாலும்‌ அவர்கள்‌ கொலைக்‌ குற்றம்‌ புரிந்தவர்களாக கருதப்பட்டு, அவர்களை கைது செய்து சிறையில்‌ அடைத்து, கடுமையான தண்டனை விதிக்கக்‌ கூடிய பிரிவுகளில்‌ வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.

ஆனால்‌ கடந்த சில வாரங்களுக்கு முன்‌ இதே ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ இருந்து ஆவினுக்கு அனுப்பப்படும்‌ பாலில்‌ கலப்படம்‌ நடைபெற்றதை விஜிலென்ஸ்‌ அதிகாரிகள்‌ அதிரடி சோதனை நடத்தி கண்டறிந்து, அதன்‌ மாதிரிகளை ஆய்வகத்தில்‌ ஆய்வுக்குட்படுத்தி, கலப்படம்‌ நடைபெற்றது உறுதியான நிலையிலும்‌ கூட அதில்‌
தொடர்புடையவர்கள்‌ இதுவரை கைது செய்யப்படாமல்‌ சுதந்திரமாக நடமாடி வருவதும்‌, தற்போது மீண்டும்‌ அது போன்ற நிகழ்வு அரங்கேறியதும்‌, அதிலும்‌ புற்றுநோய்‌ ஏற்படுத்தக்‌ கூடிய ரசாயனத்தை (ஹைட்ரஜன்‌ பெராக்சைடு) கலப்படம்‌ செய்ததை கண்டுபிடித்த அதிகாரிகள்,‌ தமிழக முதல்வரின்‌ வருகைக்காக அதனை மூடி மறைக்கப்‌ பார்ப்பதையும்‌, தமிழக முதல்வரின்‌ வருகைக்காக தவறிழைத்த குற்றவாளிகள்‌ காப்பாற்றப்படுவதையும்‌ தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ மட்டும்‌ கடந்த இரண்டூ வாரத்திற்குள்‌ இரண்டாவது முறையாக ஆவினுக்கு அனுப்பப்படும்‌ பாலில்‌ கலப்படம்‌ செய்தது, குறிப்பாக உயிருக்கு தீங்கிழைக்கும்‌ ரசாயனம்‌ கலப்படம்‌ செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும்‌, தவறு செய்தவர்கள்‌ ஆவின்‌ ஊழியர்கள்‌ என்பதாலும்‌, இந்த முறைகேடுகளில்‌ ஆவினில்‌ பணியாற்றும்‌ தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்‌, பாலுற்பத்தி மற்றும்‌ பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள்‌, மாவட்ட துணைப்‌ பதிவாளர்கள்‌ ( பால்வளம்‌) என மிகப்பெரிய அளவில்‌ கூட்டுசதி அரங்கேறி இருக்கலாம்‌ என்பதாலும்‌ ஆவின்‌ நிர்வாக இயக்குனருக்கு கீழ்‌ இயங்கும்‌ விஜிலென்ஸ்‌ அதிகாரிகள்‌ பால்‌ கலப்படங்களை மூடி மறைக்கப்‌ பார்ப்பதாகவே தெரிகிறது.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ நடைபெற்ற பால்‌ கலப்படத்தில்‌ தொடர்புடைய ஆவின்‌ ஊழியர்களை உடனடியாக நிரந்தரமாக பணி நீக்கம்‌ செய்வதோடு, அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும்‌, தற்போது நடைபெற்றுள்ள பால்‌ கலப்பட முறைகேட்டினை வைத்து பார்க்கும்‌ போது தமிழகம்‌ முழுவதும்‌ ஆவினுக்கு அனுப்பப்படும்‌ பாலில்‌ இருந்து கொழுப்பு சத்தை எடுத்து விட்டு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும்‌ உள்ள பால்‌ பண்ணைகளுக்கு அனுப்பி, பாலில்‌ கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாக தர கட்டுப்பாடு அதிகாரிகள்‌ அறிக்கை கொடுக்க அதன்‌ படி வடமாநிலங்களில்‌ இருந்து வெண்ணெய்‌, பால்‌ பவுடர்‌ திட்டமிட்டு வாங்கப்பட்டிருக்கலாம்‌.

அதன்‌ மூலம்‌ இந்தியாவிலேயே எந்த கூட்டுறவு பால்‌ நிறுவனத்திலும்‌ நடக்காத அளவிற்கு மிகப்பெரிய அளவில்‌ முறைகேடுகள்‌ நடத்தப்பட்டிருக்கலாம்‌ என்கிற சந்தேகம்‌ எழுவதால்‌ அது குறித்த உண்மையை கண்டறிய உடனடியாக சிபிஐ விசாரணைக்கும்‌, ஆவினில்‌ பணியாற்றும்‌ அதிகாரிகள்‌, பாலுற்பத்தி மற்றும்‌ பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள்‌ என அனைவரது வீடுகளிலும்‌ அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளின்‌ சோதனைகளும்‌ நடத்த உத்தரவிடப்பட வேண்டும்‌. அத்துடன்‌ ஹைட்ரஜன்‌ பெராக்சைடு போன்ற ரசாயனங்கள்‌ கேன்சர்‌ நோயை உருவாக்கி, குழந்தைகள்‌ உயிருக்கு ஆபத்தை விளைப்பதும்‌, வருங்காலத்தில்‌ குழந்தைகள்‌ பல்வேறு உடல்‌ குறைபாடுகளுடன்‌ பிறப்பதற்கான குழலை உருவாக்கும்‌ என்பதால்‌ நீதிபதிகள்‌ தாமாக முன்வந்து இந்த கலப்பட பால்‌ விவகாரத்தில்‌ வழக்கு பதிய வேண்டும்‌ என மாண்பமை பொருந்திய உயர்நீதிமன்றத்தை
தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ வலியுறுத்தி கேட்டுக்‌ கொள்கிறது.

அத்துடன்‌ பொதுமக்களுக்கு தரமான, கலப்படம்‌ இல்லாத பால்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌ இந்தியா முழுவதும்‌ சுமார்‌ 7 6 6 மாவட்டங்களில்‌ தொடர்‌ சோதனைகள்‌ நடத்த வேண்டும்‌ என 553 தெரிவித்திருக்கும்‌ நிலையில்‌ தமிழகத்தில்‌ “வரும்‌ முன்‌ காப்போம்‌” என்கிற அடிப்படையில்‌ தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ உள்ள ஆவின்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ பால்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌, குளிரூட்டும்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ பால்‌ பண்ணைகளில்‌ பால்‌ கலப்படம்‌ தொடர்பாக அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆவினோடூு நேரடி தொடர்பில்‌ இல்லாத மாநில அரசின்‌ புலனாய்வு அமைப்பான சிபிசிஐடி மற்றும்‌ மத்திய அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள உணவுப்‌ பாதுகாப்புத்துறை அதிகாரிகளின்‌ ஒருங்கிணைந்த அதிரடி சோதனைகளுடன்‌ கூடிய விசாரணைக்கு தாமதமின்றி உத்தரவிட வேண்டும்‌ என தமிழக அரசை தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ சார்பில்‌ வலியுறுத்தி கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ கடந்த 2011ம்‌ ஆண்டு உச்சந்திமன்றத்தில்‌ நடைபெற்ற பால்‌ கலப்படம்‌ தொடர்பான பொதுநல வழக்கில்‌ உச்சநீதிமன்றம்‌ அளித்த உத்தரவும்‌, அதனைத்‌ தொடர்ந்து சட்ட ஆணையம்‌ மத்திய அரசுக்கு பரிந்துரைத்த பரிந்துரைகள்‌ அடிப்படையிலும்‌ அத்தியாவசிய உணவுப்‌ பொருளாக விளங்கும்‌ பாலில்‌ கலப்படம்‌ செய்வோருக்கு ஆயுள்‌ தண்டனை விதிக்கக்‌ கூடிய வகையில்‌ தமிழக அரசு அவசர சட்டம்‌ இயற்றி அதனை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்‌ எனவும்‌ தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ வலியுறுத்துகிறது, என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 345

    0

    0