ஊழலை கண்டுகொள்ளாத CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனா..? ஆவின் பாக்கெட்டுகளில் புகைப்படம்… தமிழக பால் முகவர்கள் சங்கம் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan28 October 2023, 12:06 pm
ஊழல், முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு நன்றிக்கடனை ஆவின் நிர்வாகம் செலுத்தியுள்ளதாக தமிழக பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த 2001ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்திய “மழைநீர் சேகரிப்பு” திட்டம் முறையாக கண்காணிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த
நிலையில், அந்த திட்டத்தை திமுக அரசு மீண்டும் செயல்படுத்தக் கூடிய வகையில், தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளில் “மழைநீர் சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா…” என்கிற வாசகத்தோடு, “மழைநீர் சேகரிப்பு தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான தொலைபேசி” எண்ணும் அச்சிட்டு அது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டமைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து,
ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சியை மனதார வரவேற்கிறது. அதே சமயம் ஆவினின் 50ஆண்டுகால பால் வணிக வரலாற்றில் இதுவரை தமிழக முதல்வர்களாக இருந்த எந்த ஒரு தலைவரின் புகைப்படத்தையும், எதற்காகவும் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு விளம்பரம் செய்ததில்லை. மேலும், ஆண்டுதோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வந்த இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தேசிய தினங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த நிலையில், ஆட்சியாளர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக தற்போது முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோரது புகைப்படத்தையும், கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினையையும் (லோகோ, அச்சிட்டு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஏனெனில் கடந்த 1999ல் அப்போதைய முதல்வராக இருந்த “கலைஞர்” அவர்களின் “பவளவிழா” பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட முயற்சிகள் நடைபெறுவதை அறிந்த கலைஞர் அவர்கள் உடனடியாக அதிகாரிகளை நேரில் அழைத்து அப்படி ஏதாவது செய்தால் தொலைத்து விடுவேன் என கடுமையாக கண்டித்தார் என்பதும், தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனத்திற்கு “ஆவின் எனும் பெயர் வரக் காரணமாக இருந்த கலைஞர்” மற்றும் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் (கோடி லிட்டர் என்கிற இலக்கை அடைய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்” தொடங்கி வைத்து, பால் கொள்முதலிலும், “ஆவின்: பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி, விற்பனையிலும் “நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட காரணமாக இருந்த ஜெயலலிதா: உள்ளிட்ட முதல்வர்களின் புகைப்படங்கள் கூட இதுவரையிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம் பெற்றதில்லை என்பதும் வரலாறு.
ஆனால், “ஆவினில் ஊழல், முறைகேடுகள் எனும் “புற்றுநோய் 4th stage’ என்று சொல்லக்கூடிய அபாயகரமான இறுதிக்கட்டத்தை எட்டி, பால் கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி, விற்பனையை அதிகாரிகள் சீரழித்து வரும் நிலையில், பால் உற்பத்தியாளர்களை காத்திட, ஆவினை காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்: மட்டுமின்றி பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து “அபாயச் சங்கு- தொடர்ந்து ஊதப்பட்டு வந்தாலும் கூட தமிழக முதல்வர் தரப்பிலோ, தமிழக அரசு தரப்பிலோ இதுவரை எந்த ஒரு முன்னெடுப்பும், சிறு அசைவும் இல்லாத சூழலில், ஆவினில் வரலாறு காணாத வகையில் நடைபெற்று வரும் ஊழல், முறைகேடுகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனதை குளிர்விக்கும் விதமாகவும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை காப்பாற்றிடவும் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞரின் புகைப்படம், நூற்றாண்டு விழா இலச்சினையை ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருப்பதாகவே தெரிகிறது.
ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவும், வெண்ணெய், நெய் உற்பத்தியை தங்குதடையின்றி மேற்கொள்ளவும். ஆவின் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், 50ஆண்டுகளாக விற்பனையில் உள்ள நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற பாக்கெட்) மற்றும் 30ஆண்டுகளாக விற்பனையில் உள்ள நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலை செய்து வரும் ஆவின் அதிகாரிகள் இதன் மூலம் பச்சோந்தி வேடம் போட்டுள்ளதை உணர முடிகிறது.
அத்துடன் இதையெல்லாம் தடுக்கத் தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளம்பரப் பிரியர் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் அவரது புகைப்படத்தை வெளியிட்டிருப்பதை தடுக்க தவறியதன் மூலம் அதுவும் உண்மை தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.