ஒரே ஆவின் பால் பாக்கெட்டில்தான் எடை குறைந்ததா…? 5 லட்சம் லிட்டர் ஆவின் பால் மாயமாவது எப்படி…? திமுகவுக்கு அண்ணாமலையால் புதிய தலைவலி!

Author: Babu Lakshmanan
2 August 2022, 6:10 pm

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 15 மாதங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு ஊழல் புகாரில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.

ஊழல் பட்டியல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விலைக்கு மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை, ஸ்டாலின் அரசு மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுமத்தினார்.

இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இருவருக்கும் இடையேயான வெடித்த மோதல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

Annamalai Condemned - Updatenews360

அதே அக்டோபர் மாதக்கடைசியில், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்காக தீபாவளி இனிப்பு வாங்க டெண்டர் விடப்பட்டதில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் லாபம் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம் மட்டுமே இதில் கலந்துகொள்ள முடியும் என்ற கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதில் அதிக அளவில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தவுடன் டெண்டர் விடுவது ரத்து செய்யப்பட்டு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்கும்படி தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இந்த முறைகேடு புகாரில் அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் பெயர் இணைத்து பேசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒரு குறிப்பிட்ட பெரிய கட்டுமான நிறுவனம் விண்ணப்பித்த சில நாட்களிலேயே பல ஏக்கர் கணக்கில் நிலம் பத்திரபதிவு செய்து வீட்டுமனைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அந்த நிறுவனம் திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எனவும் ஒரு பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான். இப்பிரச்சினை இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.

ஆவினில் முறைகேடு

தற்போது ஆவின் நிர்வாகம் பிரச்சனையில் சிக்கியுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 3 நிறங்களில் 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட்டாக பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அதாவது, 500 மில்லி கொண்ட ஒரு பால் பாக்கெட் 520 கிராம் வரை இருக்கவேண்டும். ஆனால், 500 மில்லி கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை நகரில் கடந்த சில நாட்களாகவே, இதுபோல் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படி குறைந்த அளவில் ஆவின் பால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுவது சென்னை நகரில் மட்டும்தான் நடக்கிறதா?… அல்லது தமிழகம் முழுவதும் உள்ள எல்லா நகரங்களிலும் நடக்கிறதா?…என்ற மிகப்பெரிய கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்று
திமுக அரசு அதை மறுப்பதுதான் வழக்கம். ஆனால் இது மக்களின் அன்றாட பயன்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஒரு விஷயம் என்பதால் என்னவோ இந்த விவகாரம் ஒரு பிரபல முன்னணி நாளிதழில் வெளியான உடனேயே ஆவின் நிர்வாகம் இந்த முறைகேடு நடந்ததா? என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

தினசரி ரூ.2 கோடி ஊழல்

இதற்கிடையே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஒரு பரபரப்பு அறிக்கையும் வெளியிட்டார்.

அதில், “திமுக ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைக்கின்றன.
தற்போது ஆவின் நிறுவனத்தில், பாலின் அளவைக் குறைத்து வழங்கி ஒரு மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருக்கிறது. அரசு நிறுவனமே மக்களுக்கு வழங்கும் அரை லிட்டர் பாலில் 70 மில்லி அளவை குறைத்து வழங்கிய அதிர்ச்சி தகவல் நாளிதழ் ஒன்றில் தகுந்த ஆதாரத்துடன் வெளியாகி இருக்கிறது.

Annamalai - Updatenews360

வெறும் 70 மில்லிதானே குறைந்தது என்றும், தெரியாமல் நடந்து விட்டது என்றும் யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட் தினமும் விற்பனையாகிறது. ஒரு பாக்கெட்டில் 70 மில்லி என்றால், 3 ரூபாய் 8 காசுகள் குறையவேண்டும். தினமும் 2.16 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணம் கொள்ளை போயிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக பெறப்பட்ட இந்தப் பணம் யாருக்குப் போய்ச் சேர்ந்தது?. 
இயந்திர கோளாறால் ஏற்பட்ட தவறு என்று ஒரு பேச்சுக்காக வைத்து கொண்டாலும் கூட, தவறு நடந்த முதல் நாளே 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே. இந்த அதிக பால் எங்கே போனது? ஆவினில் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பால் வழங்க காரணமான அனைவர் மீதும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காட்டமாக கூறி இருந்தார்.

ஆவின் விளக்கம்

இந்த நிலையில் விசாரணையை முடித்த, ஆவின் நிர்வாகம் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்து இருக்கிறது.

அதில் “பால்‌ பாக்கெட்டுகள்‌ தயாரிக்கப்படும்‌போது பால்‌ பாக்கெட்டுகளின்‌ எடை மற்றும்‌ பால்‌ பாக்கெட்டுகளின்‌ தரம்‌ தரக்கட்டுபாடு அலுவலர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களால்‌ மணிக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்படுகிறது. சரியாக இருக்கும்‌ பால்‌ பாக்கெட்டுகள்‌ மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும்‌.

குறிப்பிட்ட நாளிதழில் வெளியான ஆவின் பாலில் அளவு குறைந்த செய்தி குறித்து ஆவின் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவரின் ஒரே ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே ஆவின் பாலின் எடை குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு பதிலாக வாடிக்கையாளருக்கு உடனடியாக மாற்று பாக்கெட்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

Aavin Milk- Updatenews360

இயந்திர தொழில்நுட்ப காரணமாக ஏதேனும்‌ அளவு குறை இருப்பின்‌ உடனடியாக நுகர்வோர்களுக்கு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால்‌ பாக்கெட்டுகள்‌ வழங்கப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நம்பகத்தன்மை இழப்பு

“தினமும் 70 மில்லியை பால் பாக்கெட்டில் குறைவாக விநியோகம் செய்வதாக கூறப்படுவது ஆவின் மீதான நம்பகத்தன்மையை தமிழக மக்களிடம் சிதைப்பதாக உள்ளது” என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் இதில் அதிகமான பாதிப்பை சந்திப்பார்கள்.

இவர்கள் 70 மில்லி குறைவாக ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவது குறித்து அறிந்திருக்க இருக்க வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் காலையில் வாங்கும் பால் பாக்கெட்டில் சரிபாதி தண்ணீரை கலந்து காய்ச்சி வீட்டில் இருப்பவர்களுக்கு டீயோ, காபியோ போடுவார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு சூடான பாலாகவும் அதைத் தருவார்கள். பாலை எடை போடுவதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் எங்கே இருக்கும்?…

தவிர நகர்ப்புறங்களில் பெரும்பாலானவர்கள் கடைகளுக்கு சென்று ஆவின் பால் வாங்குவது குறைவு. வீட்டுக்கு பால்பாக்கெட் டெலிவரி செய்யும் முகவர்கள் மூலம்தான் அதிக விற்பனையே நடக்கிறது.

எழுந்த சந்தேகம்

சென்னையில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ 28 லட்சம்‌ பால்‌ பாக்கெட்டுகள்‌ மொத்தம்‌ 361 வழித்தடங்களில்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ ஆவின்‌ விற்பனை நிலையங்கள்‌ மூலமும்‌
கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட 27 மாவட்ட ஒன்றியங்களில்‌
29 லட்சம்‌ பால்‌ பாக்கெட்டுகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து மாவட்ட நுகர்வோர்களுக்கும்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் கணக்கு சொல்கிறது.

இயந்திர கோளாறு காரணமாக சுமார் 57 லட்சம் பால் பாக்கெட்டுகளில் ஒரே ஒரு பாக்கெட்டில் மட்டும்தான் அளவு குறையுமா?…என்ற சந்தேகத்தை ஆவின் நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் எழுப்புகிறது.

ஏனென்றால் ஒரு ஆவின் பால் பாக்கெட்டில் 5 மில்லி முதல் 7 மில்லி வரைதான் இயந்திரக் கோளாறு காரணமாக பால் அளவு குறைய வாய்ப்பு உண்டு என்று பால் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர்.

தவிர ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்திய பகுதியில் விற்பனையாகாமல் முகவர்களிடம் திரும்ப வந்த பால் பாக்கெட்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கவேண்டும் ஆனால் அப்படி அவர்கள் செய்ததாக தெரியவில்லை. இதிலிருந்தே விசாரணையை அவசர அவசரமாக முடித்துள்ளது, தெரிகிறது.

இயந்திர கோளாறால் ஒரே ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே எடை அளவு குறைவாக இருந்துள்ளது என்று சொல்வதே முதலில் நம்பும்படியாக இல்லை.

ஏனென்றால் 0.001 சதவீத இயந்திர தவறு என்று வைத்துக் கொண்டால் கூட மிக குறைந்த பட்சம் 5700 பால் பாக்கெட்டுகளில் தினமும் 70 மில்லி எடை குறைய வாய்ப்பு உள்ளது என்பது தொழில்நுட்ப நிபுணர்களின் உத்தேச மதிப்பீடு ஆகும். 50 முதல் 70 மில்லி குறைந்த எடை அளவில் பால் பாக்கெட் இருப்பதை வீட்டில் இருப்பவர்களும், டீக்கடைக்காரர்களும், ஹோட்டல் நடத்துபவர்களும் கண்டுபிடிப்பது மிக கடினம். அதுவும் தினசரி இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆவின் நிறுவன கண்காணிப்பாளர்கள் பாலின் எடை அளவை பரிசோதனை செய்தாலும் கூட இதை துல்லியமாக கண்டறிய இயலுமா?.. என்ற இன்னொரு மிகப்பெரிய கேள்வியும் எழுகிறது.

திட்டமிட்ட செயலா..?

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக அறிவித்தது. தற்போது 70 மில்லி அளவு குறைந்ததால் 3 ரூபாய்க்கும் சற்று கூடுதலாகவே அரசுக்கு தினமும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ஆவின் நஷ்டத்தில் இயங்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய உத்தியைக் கையாளுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் இந்த எடை குறைவு நிகழ்வு தோற்றுவிக்கிறது.

Cm Stalin Today - Updatenews360

எனவே உரிய எடை அளவையும், பாலின் தரத்தையும் உறுதிப்படுத்தி தருவதில் ஆவின் நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரும் இதுதொடர்பாக அவ்வப்போது திடீர் ஆய்வும் நடத்தவேண்டும். அப்போதுதான் ஆவின் மீது எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விடையும் கிடைக்கும். ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் திமுக அரசை வலியுறுத்துகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 791

    0

    0