மீண்டும் ஆவின் பால் விலை உயர்கிறதா…? நெருக்கடியில் முதலமைச்சர் ஸ்டாலின்… பால் உற்பத்தியாளர்கள் கெடு..!

Author: Babu Lakshmanan
29 October 2022, 5:12 pm

தாராளம்..

தமிழகத்தின் ஆவின் பாலின் விலை அடுத்த மாதத்தின் மத்தியிலோ அல்லது 2023 ஜனவரி மாதத்தின் பிற்பகுதியிலோ கணிசமாக உயர்த்தப்படலாம் என்று ஒரு தகவல் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தபோது, தேர்தல் வாக்குறுதியின்படி ஒரு லிட்டர் ஆவின் பாலின் விலை மூன்று ரூபாயை குறைத்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மில்லி 24 ரூபாய்; பச்சை நிற பாக்கெட் 22; நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Aavin Bribery - Updatenews360

அதேநேரம் பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்தும் திமுக அரசு வழங்கியது. ஆவின் பால் நுகர்வோருக்கு விலை குறைப்பு, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை அதிகரிப்பு என்று ஒரே நேரத்தில் இருதரப்பினருக்கும் தமிழக அரசு தாராளம் காட்டியதால் ஆவின் நிறுவனத்தின் அன்றாட நஷ்டம் எகிறத் தொடங்கியது.

விலை அதிகரிப்பு

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் பால் பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி, வெண்ணை, நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலையை ஆவின் கணிசமாக அதிகரித்தது. அப்போதும் கூட நஷ்டம் குறைந்த பாடில்லை.

இதனாலும் ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை சரிகட்டும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வர்த்தக தேவைக்காகவும் வசதி படைத்தவர்கள் வாங்கும் விதமாக அதிக கொழுப்பு சத்துள்ள பால் அறிமுகம் செய்யப்பட்டது. சிவப்பு நிற பாக்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பால் 1 லிட்டர் 57 ரூபாய்க்கும், 500 மில்லி
30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு நிற பால் பாக்கெட் பெரிய அளவில் நுகர்வோரை ஈர்த்தது போல் தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 46 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்தது.
பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் 40 லட்சம் லிட்டர் ஆக குறைந்ததாகவும் தற்போது நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் மட்டும்தான் ஆவின் சார்பில் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இத்தனைக்கும் இந்த ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள், 3-வது முறையாக லிட்டருக்கு 4 ரூபாய் வரை விலையை உயர்த்தி விட்டன. அவற்றின் பால் பொருட்கள் விலையும் அதிகமாகவே உள்ளது.

தனியார் பால் லிட்டருக்கு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆவின் பால் 40 முதல் 57 ரூபாய் வரைதான் விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் பக்கம்

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் கை ஆவினை விட ஓங்கியது எப்படி?…

தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநிலப் பொருளாளர் ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது “தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 36 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது.

இந்த அளவுக்கு பால் கொள்முதலில் வித்தியாசம் ஏற்படக் காரணம், ஆவினில் 1 லிட்டர் பசும்பாலுக்கு 32 ரூபாயும், எருமைப்பாலுக்கு 42 ரூபாய் மட்டுமே உற்பத்தியாளர்களுக்குத் தருகின்றனர். அதேநேரம் தனியார் பால் கொள்முதல் நிலையத்தினர் 1 லிட்டர் பசும்பாலுக்கு 42 முதல் 45 ரூபாயும், எருமைப்பாலுக்கு
65 ரூபாயும் தருகின்றனர். தற்போது அதிகரித்துள்ள தீவன விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகளால் ஆவின் மூலம் வழங்கப்படும் பால் விலை கால்நடை வளர்ப்போருக்குக் கட்டுப்படியாகவில்லை.

milk - updatenews360

எனவே, ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 52 ரூபாய் வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்குப் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி எங்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்திருந்தது. அதன்படி கடந்த 21-ம் தேதி சென்னையில் பால்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர், வேளாண்துறைச் செயலர், கால்நடை பராமரிப்புத்துறைச் செயலர் உள்ளிட்டோருடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் நவம்பர் முதல் வாரத்துக்குள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாகவும், அதுவரை பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்று இந்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க நவம்பர் 7-ம் தேதிக்குள் பாலுக்குக் கட்டுபடியான விலை உயர்வை அளிப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

430 கோடி நஷ்டம்

உற்பத்தியாளர்களுக்குப் பால் கொள் முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்குக் கூடுதல் விலைக்குப் பால் விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அரசு கருதினால் தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வழங்குவதைப்போல பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு வழங்க முன்வரவேண்டும்.

கடந்த ஆண்டு 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது ஆவின் மூலம் தினமும் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் மூலமாக தற்போது 2 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1ரூபாய் 50 காசுகள் மட்டுமே லாபம் கிடைக்கிறது. இதையே தனியாருக்கு வழங்கினால் லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் லாபம் கிடைப்பதால் ஆவினுக்குப் பால் விற்பனை செய்ய பால் உற்பத்தியாளர்கள் தயங்குகின்றனர். இதேநிலை நீடித்தால் ஆவின் நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியாமல் போகும்.

Aavin Bribery arrest - Updatenews360

பால் கொள்முதல் குறைந்துபோனதால் இப்போதே ஆவினில் மாதம்தோறும் 430 கோடி ரூபாய் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்ய பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுபடியான விலையை அளித்தால் மட்டுமே நஷ்டத்திலுள்ள ஆவின் நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்ய முடியும்” என்று ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

“பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுவதை பார்த்தால், தமிழகத்தில் அடுத்த மாத மத்தியிலோ அல்லது வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்போ ஆவின் பாலின் விலை உயர்வு நிச்சயம் இருக்கும் என்றே தோன்றுகிறது” என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விலை உயர்வு?

உற்பத்தியாளர்களுக்கு பால் கொள் முதல் விலையை உயர்த்திக் கொடுக்க ஆந்திரா,
தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றும் ஊக்கத்தொகை விஷயத்தை தமிழக அரசு கையில் எடுக்குமா?என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஊக்கத்தொகை என்பது
மிகக் குறைவாகவே இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட மதுரை ஆவின் மண்டலம் சார்பில் இதுபோல பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உப பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபத்தை ஊக்கத்தொகையாக வழங்கியபோது ஒரு லிட்டருக்கு 50 காசுகள் மட்டுமே
கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு பாலை கொடுத்தால் ஒரு லிட்டருக்கு நான்கு ரூபாய் லாபம் வரை கிடைக்கிறது. இது போன்ற நிலையில் ஆவின் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே வழங்கும் தொகையில் குறைந்த பட்சம் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை வித்தியாசம் இருப்பதால் சொந்தமாக மாடு வைத்து பால் கறந்து விற்பனை செய்பவர்கள் அனைவருமே தனியாரை நோக்கித்தான் திரும்பும் வாய்ப்பு உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களிடம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் ஒப்புக் கொண்டால், கண்டிப்பாக பாலின் விற்பனை விலையை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற நெருக்கடியான நிலைதான் திமுக அரசுக்கு ஏற்படும். ஏற்கனவே இந்த ஆண்டு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி போன்றவை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதால் ஆவின் பால் விலையை சிறிதளவு உயர்த்தினால் கூட அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருள் என்பதால் குடும்பத் தலைவிகள் கொந்தளிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் விமர்சிகர்கள் கூறுகின்றனர்.

பால் கொள்முதல் விலை விஷயத்தில் திமுக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 552

    0

    0