ஆவின் விற்பனை விவகாரம்… ஓராண்டாகியும் இப்படியா..? சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்…! கொந்தளிக்கும் பால் முகவர்கள்…!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 6:01 pm

தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பிடிஆர் தியாகராஜன், வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியம், ராஜகண்ணப்பன், பொன்முடி, அன்பில் மகேஷ் போன்றோர் அவ்வப்போது ஏதாவது ஒரு மாறுபட்ட கருத்தை தெரிவித்து அது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

தவறான தகவல்

தாங்கள் தெரிவித்த கருத்தில் இருந்து பின் வாங்கும்போது அப்படியே சைலன்ட் மோடுக்கு சென்று விடுவது இவர்களின் வாடிக்கை என்று விமர்சிக்கப்படுவதும் உண்டு.

இந்த வரிசையில், தற்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரும் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் அவர் ஆவின் நிறுவனம் குறித்து தெரிவித்த சில தகவல்கள் தவறானவை என்று ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

minister nasar -updatenews360

மிக அண்மையில், ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

பால் விற்பனை அதிகம்

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் ஆவின் நிறுவனங்களில் பால் உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முதலமைச்சர் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பால் உற்பத்தி, உற்பத்தி பொருட்களை அதிகரிப்பது, சந்தைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆவினில் 152 பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கையால் தற்போது 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 26 லட்சம் லிட்டர் பால்தான் விற்பனை செய்யப்பட்டது. லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கூட்டுறவு பால் சங்க உறுப்பினர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து, முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

கொந்தளிப்பு

அவர் இப்படி சொன்ன சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் பால்வளத்துறை அமைச்சர் அள்ளி விடுகிறார் என்று கிண்டலாக கூறுவது போல ஒரு விரிவான அறிக்கையை சுடச்சுட வெளியிட்டனர்.

அதில் அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தவறான தகவலை கூறுவதாக விமர்சித்தும் இருக்கின்றனர். இது அமைச்சருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது.

பால் முகவர்களின் அந்த அறிக்கையில்,” நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில்  உள்ள ஆவின் பால் பண்ணை, பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பாலகங்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த 18, 19, 20ம் தேதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வுகள் மேற்கொண்டார்.

milk - updatenews360

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 32 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் சுமார் 26 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டதாகவும், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று பிறகு பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது நாளொன்றுக்கு சுமார் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த பிறகு கடந்த காலங்களை விட அதிகமாக அதாவது நாளொன்றுக்கு சுமார் 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். இதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மவுசு குறைந்த ஆவின்

உண்மையான களநிலவரம் என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 2019-2020ம் நிதியாண்டில் 33.84 லட்சம் லிட்டர், 2020-2021 நிதியாண்டில் 35.89 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-2022ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு சுமார் 28.26 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பால் உற்பத்தி தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பால் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் தனியார் பால் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை சற்று உயர்த்தி வழங்கியதால், பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நாடத் தொடங்கினர்.

Aavin Milk- Updatenews360

அதேசமயம் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து ஆவின் நிறுவனம் தரப்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததால் ஆவினுக்கான பால் வரத்து மிகப்பெரிய அளவில் குறைந்தது. அதன் காரணமாகவே ஆவினில் நெய், வெண்ணை உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆவின் பால் பொருட்கள் கிடைக்காத நிலையே இன்று வரை நிலவ காரணமாக இருந்து வருகிறது.

அதுமட்டுமன்றி கடந்த அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 2019-2020ம் நிதியாண்டில் 23.24 லட்சம் லிட்டர், 2020-2021ம் நிதியாண்டில் 24.30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு 2021-2022ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு சுமார் 26.41 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. இது கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற விற்பனையோடு ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த பிறகு, தமிழகம் முழுவதும் வெறும் 2.11 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் பால் விற்பனை உயர்ந்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

சதி

மேலும் ஆவினில் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில் நெய், வெண்ணை, தயிர், மோர், லஸ்சி, பால்கோவா, ஐஸ்கிரீம், சாக்லேட், நூடுல்ஸ், குலோப்ஜாமூன், டெய்ரி ஒயிட்னர், நறுமணப்பால் உள்ளிட்ட சுமார் 46 வகையான பால் பொருட்கள் மட்டுமே ஆவினில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மையான தகவலாகும்.

மேற்கண்ட தகவல்கள் எல்லாம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப் பேரவையில் நடைபெற்ற பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தவறான தகவல்களை பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் ஆவின் நிறுவனத்தில் கொள்முதல், விற்பனை செய்யப்படும் பாலின் அளவு, உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை சட்டப் பேரவையில் ஒன்றாகவும், பொதுவெளியில் மாறுபாடாகவும் பேச அமைச்சருக்கு குறிப்பெடுத்து தந்த அதிகாரிகள் ஒருவேளை அரசுக்கும், அமைச்சருக்கும் வெவ்வேறு தகவல்களை கொடுத்து ஆவினை அழிக்கவோ அல்லது ஆவின் மீதான நற்பெயரை கெடுக்கவோ சதி செய்கிறார்களோ? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

எனவே தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தனது துறையிலும், ஆவினிலும் நடைபெறும் உண்மையான தகவல்களையும் சேகரித்து பேசிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

ஓராண்டில் குளறுபடி…

“அமைச்சர் நாசர் தெரிந்துதான் பேசினாரா? அல்லது தெரியாமல் பேசினாரா? என்பது புரியவில்லை. ஆனால் பதவியேற்று ஓராண்டாகியும் கூட தனது துறையைப் பற்றி அமைச்சர் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையே இது உணர்த்துவதாக உள்ளது” என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் இன்னொரு கேள்வியும் எழுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று அமைச்சர் கூறுவதிலிருந்து தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு கால்நடை வளர்ப்போரிடமிருந்து பாலை வாங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால் தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து உணர்ந்துள்ள அவர், ஆவினில் 152 பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்று எப்படி கூறினார் என்பதுதான் புரியவில்லை. உண்மையிலேயே இத்தனை பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்றால் அது குறித்த தகவல்களை அவர் உறுதி செய்திருக்க வேண்டும். இது கடினமான காரியம் அல்ல. ஓரிரு மணி நேரம் ஆய்வு செய்தாலே அதிகாரிகள் கூறுவது உண்மையா?… என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

ஆனால் சில அரசியல் கட்சிகள் 100 பேருக்கு அன்னதானம் செய்துவிட்டு,
ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினோம் என்று பல மடங்கு மிகைப்படுத்தி கூறுவது போலவே பால்வளத் துறை அமைச்சரின் தகவலையும் கருதவேண்டியுள்ளது.
அல்லது ஆவின் நிறுவன அதிகாரிகள் அமைச்சருக்கு தவறான தகவல்களை கூறி இருக்கவேண்டும். இதில் ஏதோ ஒன்று நிச்சயம் நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

தற்போது ஊடகங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட கடுமையாக விமர்சிக்கப்படுவதால் அது பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் பேசுவதே நல்லது. இதனால் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்க்கலாம்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் யோசனை கூறுகின்றனர்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 613

    0

    0