ஆவின் ஹெல்த் மிக்ஸ் முறைகேடு விவகாரம்… அண்ணாமலை சொன்னது உண்மைதான்… தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
8 June 2022, 9:31 pm

சென்னை : ஆவின் ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பில் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” வழங்காமல், தனியார் தயாரிப்பான “Pro PL ஹெல்த் மிக்ஸ்” வழங்க ஒப்பந்தம் போடப்பட்டதால், அரசுக்கு 77 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆவினில் ஹெல்த் மிக்ஸே இல்லை என்று அவரது குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமும் அளித்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு உண்மை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது ஆவினில் ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருளே கிடையாதே பின்னர் எப்படி இது சாத்தியமானது? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் களத்தில் இறங்கினோம்.ஆவினில் பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல் சேகரித்ததில் ஆவினில் அப்படி ஒரு ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருள் உற்பத்தியே இல்லை என்பதும், இல்லாத பொருளை முன் வைத்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திட்டக்கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் தரப்பில் கலந்துகொண்ட ஆவின் பொது மேலாளர் ராஜேந்திரன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் “Pro PL ஊட்டச்சத்து” பொருளுக்கு மாற்றாக “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” வழங்கிட பரிந்துரை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சி தொடங்கி தற்போதைய திமுக ஆட்சி வரை ஆவினில் ஊழல், முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கும் நிலையில் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” குறித்து பொது மேலாளர் ராஜேந்திரன் எதன் அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார்? என்ற சந்தேகம் வலுத்தது.

ஒருவேளை கடந்த காலங்களில் ஆவினில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் போல தற்போது “டெய்ரி ஒயிட்னரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்று கூறி அதை வைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடுகள்” செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதா? என தெரியாததாலும் ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பரிசுப் பொருள் பெட்டகத்திற்கு பரிந்துரை செய்ய துறைசார்ந்த அமைச்சர், அரசு செயலாளர், கமிஷனர், நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தெரியாமல் ஒரு பொது மேலாளரால் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவெடுத்திருக்க முடியாது என்பதாலும் அவரை அவ்வாறு இயக்கியது யார்? என கேள்வி எழுந்தது.
பின்னால் இருந்து முறைகேடுகள் செய்ய திட்டமிட்டது யார்? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

உற்பத்தியே செய்யப்படாத பொருளை வைத்து விவாதம்: இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பால்வளத்துறை செயலாளர் ஜவஹர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு பொய்யை மறைக்க அடுக்கடுக்கான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளது அப்பட்டமாக தெரிந்துள்ளது.

ஏனெனில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பால் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பால்வளத்துறை சார்பில் அமைச்சர் நாசர் வெளியிட்ட 36அறிவிப்புகளில் 26ஆவது அறிவிப்பில் தான் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” உள்ளிட்ட 10 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அறிமுகம் செய்ய இருப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” தயாரிப்பு தொடர்பாக பால்வளத்துறை சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 13ஆம் தேதி தான். அப்படி இருக்க அரசு வழங்கும் சத்துப்பொருட்கள் தொகுப்பு தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன் மார்ச்சில் நடத்திய திட்டக்கமிஷன் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற ஆவின் பொதுமேலாளர் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” குறித்து எப்படி எடுத்துரைத்தார்?

பால் பவுடரா, ஆவின் ஹெல்த் மிக்ஸ் ஆ? உற்பத்தியே செய்யப்படாத பொருளை வைத்து திட்டக்கமிஷன் கூட்டத்தில் விவாதம் நடத்தி அதனை அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் இணைக்க ஒப்புதல் அளித்து 8 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு பட்டியலில் Pro PL ஹெல்த் மிக்ஸை நீக்கி விட்டு, ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்த்தது கடும் அதிர்ச்சியளிக்கிறது.”ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்கள்” சொன்ன கதை போல எதிர்க்கட்சித் தலைவர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டை மறுக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி அதில் அவசரகதியில் எழுதப்பட்ட திரைக்கதை, வசனத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், பால்வளத்துறை அமைச்சரும் படித்துள்ளதோடு, அதற்கு பால்வளத்துறை செயலாளர் ஜவஹரும் சிறந்த முறையில் ஒத்துழைத்துள்ளார்.

எனவே, ஆவின் ஹெல்த் மிக்ஸ் தொடர்பான அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ‘ஆவின் டெய்ரி ஒயிட்னர்’ எனப்படும் பால் பவுடரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் எனக் கூறி திட்டக்கமிஷன் முன் பரிந்துரை செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • big boss balaji new movie news பல பெண்களை ஏமாற்றிய பிக் பாஸ் பாலாஜி..சரமாரியாக தாக்கிய பெண் ஆட்டோ டிரைவர்..!
  • Views: - 865

    0

    0