ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.. ஜிஎஸ்டி வரி ரத்து : விசிக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமா!
Author: Udayachandran RadhaKrishnan9 ஏப்ரல் 2024, 1:14 மணி
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.. ஜிஎஸ்டி வரி ரத்து : விசிக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமா!
நாடாளுமன்ற மக்களவை 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தல் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.
சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் விசிகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்பு திருமாவளவன் பேசியதாவது, பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு எப்போதும் விசிக துணை நிற்கும்.
மத்திய பாஜகவை வீழ்த்துவதே எங்களது ஒரே இலக்கு. வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும் என தெரிவித்தார்.
விசிக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்கள்:
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தப்படும். மேலும் சம்பளத்தை அதிகரிக்க விசிக குரல் கொடுக்கும்.
ஆவண கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும்.
வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ரத்து. கல்வி, விவசாய கடன் ரத்து. நீட் தேர்வு ரத்து. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, அனைத்து மொழிகளின் நலன் பாதுகாக்க குரல் எழுப்பப்படும்.
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது.
ஆளுநர் பதவி ஒழிக்க வேண்டும். அனைத்து மாநில மொழிகளிலும் அம்பத்கர் நூல்கள். தனியார்மயமாக்குவதை கைவிடுதல். கச்சத்தீவு மீட்க குரல் எழுப்பப்படும்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு. ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை. தேர்தல் ஆணையர் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழலை விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க குரல் கொடுப்போம்.
0
0