இந்தி ஒழிக அல்ல.. தமிழ் வாழ்க.. திராவிடம் ஒழிக என்பது எங்க கோட்பாடு அல்ல : கட்சியினர் மத்தியில் சீமான் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 8:52 pm

இந்தி ஒழிக அல்ல.. தமிழ் வாழ்க.. திராவிடம் ஒழிக என்பது எங்க கோட்பாடு அல்ல : கட்சியினர் மத்தியில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும். திராவிடம் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல. தமிழ்த்தேசியம் எழுக என்பதே எங்கள் கோட்பாடு” எனப் பேசியுள்ளார்.

சீமான் பேசுகையில், “நான் கட்சியில் இருக்கிறேன், மகிழ்ச்சி. என்னால் எத்தனை பேர் கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் வளர்ச்சி. ஒரு வாக்குச்சாவடிக்கு 8 – 10 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இனி அதை நீங்கள் செய்து தான் ஆகவேண்டும்.

அவரவர் தங்கள் வாழ்விடத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள். இந்த கோட்டையைத் தொடுவது எளிது. நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும். இன்னொருவரின் தாய் மொழியை அழிப்பது என் வேலையல்ல. என் தாய்மொழியை காப்பதே என் கடமை.

திராவிடம் ஒழிக எங்கள் கோட்பாடு அல்ல. தமிழ்த் தேசியம் எழுக; வெல்க என்பதுவே என் கோட்பாடு. மற்றவன் தோற்க வேண்டும் என்று பணி செய்யாதே; நாம் எப்படி ஜெயிக்கவேண்டும் என்பதை நினைத்து பணி செய்யவேண்டும். அதுதான் நம் கோட்பாடாக இருக்க வேண்டும். மண்ணை வெல்வதற்கு முன், மக்களின் மனதை வெல்ல வேண்டும்.

நாம் மழை வெள்ளத்தில் களப்பணியாற்றியபோது நம்மைப் பற்றிய செய்திகள் வரவில்லை என பலர் வருந்தினர். நம் விளம்பரத்திற்காக வேலை செய்யவில்லை. விரும்பி வேலை செய்கிறோம். இது நம் கடமை. அதன் வழியில், செயல்படவேண்டும்.

தாயன்பைத் தாண்டிய பேரன்புடன் செயல்படும் தகுதி உள்ளவன் எவனோ, அவனே நாம் தமிழர் கட்சியின் முதன்மைத் தளபதியாக வலம் வரமுடியும். புரட்சியாளர்கள் எல்லோரும் ஒரே தத்துவத்தின் கீழ் பணி செய்தவர்கள் தான்.

நம்மை சிலர் பயமுறுத்துவார்கள். கூட்டணி வைக்காதபோது நம்மை விமர்சித்தவர்கள், இப்போது பாராட்டுகிறார்கள். அதற்கான நல்ல முடிவு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும். தோற்று தோற்று வென்றவனின் மனது இரும்பினும் கடினமாய் இருக்கும்.

என் அன்பு உடன்பிறந்தாரே உங்கள் மனது இரும்பினும் கடினமானதாய் இருக்கவேண்டும். நாம் வெல்வோம். நம்பிக்கையோடு இருப்போம். உங்கள் அப்பா முதலமைச்சரா? இல்லை. சாதி, மதத்தைச் சொன்னீர்களா? இல்லை. நீ உன் இனத்தின் கல்லறையில் பிறந்தவன். நீ உன் இனத்தின் ஒப்பாரியில் வளர்ந்தவன். உன்னையும் என்னையும் இறுகப்பிணைத்து வைத்திருப்பது தமிழும் நம் தலைவர் பிரபாகரனும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என ஆக்ரோஷமாகப் பேசினார் சீமான்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!