ஆபாசமாக திட்டிய தவெக நிர்வாகி.. தீர்க்கவில்லையா மாநாட்டு பாக்கி? பரபரப்பு புகார்

Author: Hariharasudhan
6 November 2024, 12:11 pm

தவெக மாநாட்டுக்குச் சென்ற வாடகை பாக்கி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “நாங்கள் இருவரும் ஆக்டிவ் ஓட்டுநர்கள். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை தொடர்பு கொண்டு, தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டார்.

இதன் அடிப்படையில், சம்பளத்தொகை பேசி விட்டு மாநாட்டுக்கு அழைத்துச் சென்றோம். அக்டோபர் 27ஆம் தேதி தொண்டர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் செல்லும் போதே வாகனத்திற்குள் தொண்டர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை மாநாட்டில் இறக்கி விட்டோம். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மோகன் எங்களிடம் கூறியபடி சாப்பாடு எதுவும் எங்களுக்கு வாங்கித் தரவில்லை.

இருப்பினும், தவெக மாநாடு முடிந்து அனைவரையும் பாதுகாப்பாக மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தோம். இதன் பிறகு மோகன், தான் கூறிய சம்பளத் தொகையை எங்களுக்குத் தரவில்லை. பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், ஆட்களை வைத்து எங்களை தாக்கவும் முயன்றார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் எங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார்.

எனவே, நாங்கள் இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மோகன் மற்றும் சுதாகர் ஆகிய இருவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, போக்குவரத்து நெரிசல், 15 – 20 கி.மீ வரை தொண்டர்கள் நடந்தது, செண்டர்மீடியனில் ஆபத்தான முறையில் உறங்கியது உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. இந்த நிலையில் தான், ஓட்டுநர்களின் இந்தப் புகார் தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : திடீரென புதைக்கப்பட்ட உடல்.. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 186

    0

    0