இதுதான் என் வழி… எதைப் பற்றியும் கவலையில்ல ; திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி..!!
Author: Babu Lakshmanan22 August 2023, 10:26 am
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஜெயிலர் படத்தின் வெளியிட்டுற்கு முன்பு நான்கு வருடங்களுக்குப் பிறகு இமயமலைக்கு ஆன்மிக பயணத்திற்கு சென்றார். இந்தப் பயணத்தின் போது உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:- நான்கு வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு நல்ல படத்தை உருவாக்குங்கள் என உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனைத்து காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர் நெல்சன், பின்னணி இசையின் மூலம் படத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்ற அனிருத், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் நடித்த நடிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
அப்போது, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சர்ச்சை ஆகியது குறித்து கேட்டதற்கு, “யோகி, சன்னியாசி ஆனவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்னுடைய பழக்கம்,” என தெரிவித்தார்.
சந்திராயன் 3 நிலவில் இறங்குவது குறித்து கேட்டதற்கு, அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை என பதில் அளித்த அவர், தொடர்ந்து பேசுகையில், அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, என்றார்.
0
0