விமல்ராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய ஆர்கே சுரேஷ் ; ‘நான் நடித்த படத்தின் காட்சியைப் போல’.. எனக் கூறி கண்கலங்கினார்..!!

Author: Babu Lakshmanan
6 August 2022, 10:19 am
Quick Share

கபடி வீரர் விமல்ராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கடலூர் – பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் கிராமத்தில் கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது. 63 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், பெரியபுறங்கணி அணியும் விளையாடியது. அந்த அணியின் விளையாடிய ஆட்டத்தில், விமல்ராஜ் ரெய்டு சென்ற போது, அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல தூள்ளிக் குதித்த விமல்ராஜ் கீழே விழுந்தார். அந்த சமயம் எதிரணியைச் சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிக்க முயன்ற போது, அந்த நபரின் கால் பகுதி, விமல்ராஜின் மார்பு மற்றும் தொண்டையில் வேகமாக மோதியது. அப்போது எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட விமல்ராஜ் திடீரென மயங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விமல்ராஜை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கபடி வீரர் ஒருவர் களத்திலேயே உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜுக்கு தாய், கண்பார்வையற்ற தந்தை மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். விமல்ராஜை நம்பியே குடும்பத்தின் வாழ்வாதாரம் இருந்து வந்த நிலையில், அவரது மரணம், அந்தக் குடும்பத்தையே சிதைத்து விட்டது போலாகிவிட்டது. எனவே, அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், விமல்ராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை விமல்ராஜின் குடும்பத்தினரிடம் திமுக அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். அப்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார்.

அதேபோல, உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களுக்கு நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் நடித்து வெளிவரவுள்ள படத்தில் வரும் காட்சியைப் போன்றே விமல்ராஜ் உயிரிழந்துள்ளதாகவும், மதுரையில் நடைபெறும் கபடி போட்டியில் விமல்ராஜை கௌரவிக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்வேன், என்று கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 719

    1

    0