‘சிங்கப்பூர்ல இருந்த மரியாதை கூட தமிழகத்துல இல்ல’ ; தேவா நிகழ்ச்சியில் வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார்.. அதிர்ந்த அரங்கம்..!!
Author: Babu Lakshmanan21 November 2022, 2:29 pm
தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். பல்வேறு நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த தேவா, அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சூப்பார் ஸ்டார் என்ற ஸ்லோகனுக்கு மாஸ் பிஜிஎம் கம்போஸ் செய்தவரும் இவர்தான்.
இந்த நிலையில், ‘தேவா தி தேவா’ என்ற இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மீனா, மாளவிகா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தேவாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் இசைக்கப்பட்டன. பாட்ஷா படத்தின் பிஜிஎம் இசைக்க, தேவா குறித்து பேசுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் மேடையேறினார். இதனை பார்த்த ரசிகர்களால் அரங்கமே அதிர்ந்தது.
பின்னர், மேடையில் பேசிய ரஜினிகாந்த், வைரமுத்து எழுதி தேவா இசையமைத்த பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசியதாவது ;- சிங்கப்பூர் அதிபராக இருந்த நாதன் தமிழராக பிறந்து மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன் அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, பொற்காலம் படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும். தான் இறந்த பிறகு அந்தப் பாடலை ஒலிக்க விட்டு, எனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவரது விருப்பத்தை ஏற்று, நாதன் உயிரிழந்தபின் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முன்னர் உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. தஞ்சாவூர் மண்ணு பாடலுக்கு இசையமைத்தவர் நம்ம தேவா தான். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளில் அந்தப் பாடலை மொழிப் பெயர்த்து பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர்.
ஆனால், எந்த தமிழ் ஊடகங்களும் அதுகுறித்து எழுதவில்லை. இதனால் தேவாவின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளிவுலகிற்கு சொல்ல வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் நாதன் உயிரிழந்த பிறகு தஞ்சாவூரு மண்ணு பாடல் ஒலிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.