சமூக நீதி பேசும் சூர்யா, மாணவர்களை வதைத்தது சரியா…? கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

Author: Babu Lakshmanan
5 April 2023, 7:18 pm

சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாணவர் நலனுக்கு ஆதரவாக கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை முதல் ஆளாக ஆவேச முழக்கங்களை எழுப்பி வந்த நடிகர் சூர்யாவும் அவருடைய மனைவி ஜோதிகாவும் தற்போது பள்ளி மாணவர்களையும், முதியோர்களையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுட்டெரிக்கும் கோடை வெயிலில் காத்திருக்க வைத்த நிகழ்வு தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அதுவும் ஒரு மனிதன் எத்தகைய சூழ்நிலையிலும் தனது மனசாட்சிபடி நியாயமாக நடந்து கொள்ளவேண்டும் என்று மேடைகளில் உபதேசிக்கும் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினரால் இப்படி ஒரு அவலம் அரங்கேற்றப்பட்டு இருப்பதுதான் இதில் மிகவும் வேதனையான விஷயம்.

கடந்த ஒன்றாம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் நடந்த சம்பவம்தான் அவர்கள் மீது தமிழக மக்கள் கடுமையான விமர்சனங்களை வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

கீழடியில் 18 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. அதில் 6 கட்டடங்களில் இரண்டு தளங்களில் 2800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மார்ச் 6-ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட மார்ச் 31ம் தேதி வரை இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஏப்ரல் 1 முதல் பெரியவர் 15, சிறியவர் 10, மாணவர்கள் 5, வெளிநாட்டினரில் பெரியவர் 50, சிறியவர் 25, போட்டோ எடுக்க 30, வீடியோ எடுக்க 50 ரூபாய் என நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அத்துடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த அருங்காட்சியத்தை பார்க்க அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சனிக்கிழமை அதாவது ஏப்ரல் 1-ம் தேதி மட்டும் அருங்காட்சியகத்தின் விதிமுறை மீறப்பட்டு இருக்கிறது. அன்று காலை 9 மணி அளவில் முன்கூட்டியே இந்த அருங்காட்சியகத்திற்குள் சென்று நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, ஜோதிகா, தேவ் மற்றும் தியா ஆகியோர் குடும்பத்துடன் காலை 11 மணி வரை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. இவர்களை மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு. வெங்கடேசன்தான் அழைத்துச் சென்றுள்ளார்.

சூர்யா குடும்பத்தினர் வந்திருந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் இழுத்து பூட்டப்பட்டது. மேலும், அருங்காட்சியத்தை பார்வையிட வந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெயிலில் கால் கடுக்க ஒரு மணி நேரம் வெளியே காத்து நின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களும் ஏன் அருங்காட்சியகத்தை 10 மணி ஆன பின்பும் திறக்கவில்லை? என்ன காரணம்? என்று அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகளை பார்த்த அங்கிருந்த செய்தியாளர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை பெண் அதிகாரியிடம் கேட்க அவர் அதை காதுகளில் வாங்காதது போல அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார்.

சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் நடிகர் சூர்யா குடும்பத்தினர் டிக்கெட் வாங்கினார்களா என கேள்வி எழுப்ப அவர்கள் டிக்கெட் வாங்கிவிட்டுத் தான் உள்ளே சென்றார்கள் என்று அந்த அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர்.

செய்தியாளர்கள் விடாமல் அந்த டிக்கெட்டின் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்க அதிகாரிகள் பேந்த பேந்த விழித்ததாக தெரிகிறது. பின்னர் அதிகாரிகள் நடிகர் சூர்யாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்ட புகைப்படங்களை காட்டினர். அவர் பணம் செலுத்தினாரா? என்ற அடுத்த கிடுக்குபிடி கேள்விக்கு சூர்யா குடும்பத்தினர், வெங்கடேசன் எம்பியுடன் வந்ததால் பணம் வாங்கவில்லை என்று அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேடையில் சமூகநீதி என்று பேசிக்கொண்டு நிஜத்தில் இப்படி எல்லாம் செய்வதா? என்று சூர்யா குடும்பத்தினரை தாக்கி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நடிகரின் குடும்பத்தினருக்காக பள்ளி மாணவர்களை வாட்டி வதைக்கும் வெயிலில் காக்க வைக்கப்பட்ட நிகழ்வு கல்வியாளர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

அதேநேரம் இது குறித்து, நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார். ‘தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பையும், தொன்மையையும் கீழடி உணர்த்துகிறது. மேலும், தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம். தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கம்” என பதிவிட்டிருந்தார்.

அதேபோல வெங்கடேசன் எம்பியும் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் தளத்தில் இணைத்து இருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் கடந்த 3 நாட்களாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. மேலும் மதுரை மாவட்ட பாஜகவினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அருங்காட்சியகம் திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கப் படவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சில மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டனர்.

நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதிமுறைகளை மீறி உள்ளே சென்றுள்ளனர். மேலும் தனது தனிப்பட்ட நலனுக்காக வெங்கடேசன் எம்பி நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்று இருக்கிறார். இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி வரும் காலத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நெட்டின்கள் பலரும் மேடைக்கு மேடை, படத்துக்கு படம்தான் இவர்கள் மக்கள் நீதி, சமூக நீதி என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் எல்லாமே கப்ஸா! இவர்கள் மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் நடத்துவது என சொல்வதெல்லாம் வேஸ்ட்!

மாணவர்களும், பொதுமக்களும் வெயிலில் கால்கடுக்க நின்றிருந்த நிலையில் இவர்கள் செய்திருப்பது நியாயமா?

இவர்கள் உண்மையிலேயே சமூக போராளிகளா அல்லது போராளி வேஷத்தில் இருக்கும் போலிகளா? என்று கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

“கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி நடிகர் சூர்யா குடும்பத்தினர் சுற்றி பார்த்த விவகாரத்தில் இன்னொரு பெரிய உண்மையையும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை
சூர்யா கொதித்தெழுந்து அறிக்கை விட்டதெல்லாம் அவருடைய அடி மனதில் இருந்து வெளிப்பட்டவை அல்ல. மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான் அவர் அப்படி கூறியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் சொந்த மூளையை பயன்படுத்தாமல் இரவல் மூளையைத்தான் நடிகர் சூர்யா இன்று வரை பயன்படுத்தி வருகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏனென்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகும் கூட நீட் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது சூர்யா அது பற்றி எந்த கருத்தையும் காட்டமாக தெரிவிப்பதில்லை. ஏனென்றால் வெங்கடேசன் எம்பி வாய் திறந்தால் தானே சூர்யாவும் வாய்ஸ் கொடுப்பார்” என்று கல்வியாளர்கள் கேலியாக கூறுகிறார்கள்.

“திரைப்படங்களில் வசனகர்த்தா எழுதித் தருவதை அப்படியே பேசி பழகிவிட்ட நடிகர்களுக்கு சுட்டு போட்டாலும் கனமான எதார்த்த வார்த்தைகள் நிஜ வாழ்வில் வராது என்பதுதான் உண்மை.

குறிப்பாக, நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமில்லாமல் உயிரையும் பறிக்கிறது.

நீட் தேர்வு என்பது கல்வி தளத்தில் மாணவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.

நீட் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவர்களாக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது.

கம்யூனிச சித்தாந்த அடிப்படையில் கதைகள் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற சு வெங்கடேசன் எம்பியின் நீட் தொடர்பான இதுபோன்ற கொதி நிலை கருத்துகளைத்தான் உடனுக்குடன் நடிகர் சூர்யா இதுவரை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவிலேயே அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொண்ட தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத காலகட்டத்தில் எத்தனை அரசு பள்ளி மற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது என்பது பற்றி சு வெங்கடேசனோ நடிகர் சூர்யாவோ ஒருபோதும் வாய் திறக்க மாட்டார்கள்.

இதைவிட வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கோவில்களில் அதிக கட்டணம் செலுத்தி சாமி பார்க்கும் சிறப்பு தரிசன முறையை தொடர்ந்து கடுமையாக சாடி வரும் நடிகர் சிவக்குமார் எப்படி கீழடி அருங்காட்சியகத்தில் சு வெங்கடேசன் எம்பி ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பு சலுகையை மட்டும் பயன்படுத்திக் கொண்டு
மாணவர்களையும் பொது மக்களையும் கோடை வெயிலில் ஒரு மணி நேரம் காய விட்டார் என்பதுதான் தெரியவில்லை. இது முழுக்க முழுக்க சுயநலமே தவிர வேறு எதுவும் இல்லை.

இதன் மூலம் தந்தை, மகன், மருமகள் என அத்தனை பேருமே நிஜ வாழ்விலும் எங்களை நடிப்பில் மிஞ்ச யாரும் கிடையாது என நிரூபித்திருக்கிறார்கள்!”என்று
அந்த கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது!

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 406

    0

    0