திமுகவுக்கு குறையும் மவுசு? சட்டசபையை கூட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட அரசு முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 7:16 pm

தமிழகத்தில் விஜய் மாநாடு, த.வெ.க.செயற்குழு கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் திமுக அரசுக்கு எதிராக டிரெண்ட் மாறியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்து இருப்பதால் சட்டசபை அவசரமாக கூடுகிறது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு காலம் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் இருந்து தேர்தல் பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விசிக ஆட்சியில் பங்கு கேட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 5 சீட்டு உள்ள விசிகாவே ஆட்சியில் பங்கேட்கும் போது, இந்தியா முழுவதும் எதிர்க்கட்சியாகவும், 15 சீட்டுகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கு ஏற்காமல் இருக்குமா என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர் வேட்டுக்கள் கேட்கத் துவங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியினரும் நீர் பூத்த நெருப்பாக உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் போராட்டம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜாடை மாடையாக திமுக அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயின் மாநாட்டில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர். இந்நிலையில் மாநாட்டு மேடையிலேயே திமுகவை வாங்கு,வாங்கு என வாங்கிவிட்டார் விஜய்.

மேலும் ஊழல் அரசாக திராவிடம் மாடல் அரசு உள்ளது. குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது என பேசியது இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில்: மத்திய அரசின் ஒரே நாடு, ஒரேதேர்தல் அறிவிப்புக்கு கண்டனம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது. இந்த விவகாரத்தில் போராட தயங்கமாட்டோம். நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம்அமைக்க விவசாயிகள் ஒப்புதலின்றி நிலத்தை கையகப்படுத்த கூடாது. கோவையில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மூன்றாவது மொழியை திணிக்கும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது.

எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் அணுகுமுறையை திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் கடுமையாக எதிர்க்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சமூகநீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்பமாட்டார்கள். மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியைநிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும். நீட் விவகாரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசை எதிர்க்கிறோம்.
கட்டணம், வரிகளை உயர்த்தி மக்களின் பொருளாதார நிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பட்டப்பகலில் குற்ற செயல்கள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்ற நிர்வாக சீர்கேட்டைசரிசெய்யாமல், ஆட்சி அதிகாரத்தில் உள்ள சிலரது நலனில் அக்கறையுடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம். பொய்களின் பட்டியலாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு, ஜனநாயகத்தையும், மக்களையும் ஏமாற்றியது ஆளும் திமுக. அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி, மாதம்தோறும் மின்கணக்கீடு செய்ய வேண்டும். ஒருபுறம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து, மறுபுறம் மதுக்கடையை திறந்து வருவாய் பெருக்குவது ஏற்புடையது அல்ல.

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும். தகைசால் தமிழர் விருது வழங்குவதற்காக தமிழக அரசையும், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசையும் வரவேற்கிறோம். தவெககட்சி நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் என 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்பு தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி விஜய் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி குறித்து பின்னர் ஆலோசிப்போம். சீமான் உட்பட எந்த தலைவர்களையும் இகழ்ந்து பேச கூடாது. குறிப்பாக, அதிமுக மீதான விமர்சனங்களை அறவே தவிர்க்க வேண்டும். தவெக மீதான விமர்சனங்களுக்கு சரியான ஆதாரத்துடன், கண்ணியத்தோடு உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும். சொந்த வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடாது. பூத் கமிட்டியிலும், வாக்கு சேகரிப்பிலும் பெண்களை அதிக அளவில் இடம்பெற செய்ய வேண்டும். எங்காவது கொடி ஏற்றவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ அனுமதி கிடைக்காவிட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்கவும். டிச.27-க்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை மாறி இருப்பதாகவும், விஜய் மாநாட்டில் பேசியது பெரும் எழுச்சி ஏற்படுத்தி உள்ளது என்றும்,ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் அவருக்கு பின்னால் செல்லும் மனநிலையில் இருப்பதாகவும், த.வெ.க. மாநாடும் செயற்குழு கூட்டம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அரசுக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் உளவுத்துறையினர் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். இதனால் திமுக அரசு அவசர அவசரமாக சட்டசபையை கூட்ட உள்ளது.

இது குறித்த அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் அவை கூடியது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஜூன் 26-ந் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து நீக்கிவைக்கப்பட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை கூடும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற முடியாத சூழ்நிலை எழுந்தது.

ஆனால் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும், அதை கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து அடுத்து வரும் சட்டசபை கூட்டத்தொடர்களில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. கடந்த ஜூன் 29-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்தது.

அதாவது டிசம்பர் 28-ந் தேதிக்குள் மறுபடியும் சட்டசபை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசித்தனர். அதில், இந்த மாதம் இறுதி வாரம் அல்லது வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களுக்குள் வெளியாகிறது. சபாநாயகர் அப்பாவு அந்த அறிவிப்பை வெளியிடுவார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூட்டத் தொடர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆளும் கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிப்பார்கள்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முயல்வார்கள். எனவே வரும் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் காரசாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். சட்டசபையை அவசரமாக கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் திமுக அரசுக்கு ஏற்பட்டது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தி.மு.க.,வினர்
சொன்னதை செய்வோம்… செய்வதை சொல்வோம் என்றார்கள். சொன்னதை செய்யவில்லை .. அதே நேரத்தில் சொல்லாத சொத்து வரி உயர்வு, துணை முதல்வர் பதவி என பலவற்றை செய்கின்றனர். மக்கள் அனைவருக்கும் பெப்பே என்று அறிவித்துவிட்டனர். தேர்தல் அறிவிப்பில் திமுக கூறிய அணைத்து திட்டமும் நீரில் கோலம் போட்டது போல் காணாமல் போய்விட்டது.

தமிழகத்தில் பல துறைகள் நிதி நெருக்கடி சிக்கி தவிக்கின்றன. குண்டா சட்டிக்குள் குதிரை ஓட்டும் கதையாக திமுக அரசின் செயல்பாடு உள்ளது. வேறு திட்டங்களுக்கு உள்ள நிதி ஆதாரங்களை பிக்பாக்கெட் அடிப்பது போல பறித்து, அவசர திட்டங்களுக்கு அரசு மாற்றி வருகிறது. நிதி ஆதாரத்தில் அரசுக்கு நெருக்கடி முற்றி, சுருக்கு பிடியாக உள்ளது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் சவுக்கடி ஆகியவற்றில் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஆவதுபோல் திமுகவினரின் குடும்ப தலையீடு அதிகரித்துள்ளது. மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுப்பு கானல் நீராகிவிட்டது. சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் நசுக்கும் நரகாசுரன் ஆகிவிட்டது. மக்களின் கோபம் அரசின் பக்கம் திரும்பி உள்ளது.

விடியல் அரசுக்கு மக்கள் எதிர்பார்த்து ஓட்டு போட்டது விதியா இல்லை சதியா எனக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடம் அரசுக்கு எதிராக டிரெண்ட் மாறி உள்ளது. இதை பயன்படுத்த விஜய் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.

இது குறித்து உளவுத்துறையும் அரசுக்கு அவசர அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. விஜய் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் விழி பிதுங்கி நிற்கும் திமுக அரசு. மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூபாய் எடுத்துக் கொடுப்பது, அரசுக்கு கை கொடுக்கும் என கணக்கு போட்டது. ஆனால் இந்த விஷயம் அரசுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஆயிரம் ரூபாய் வாங்கிய ஒருவர் பயன்பட்டாலும் வாங்காத 100 பேர் அரசு மீது கோபமாக உள்ளனர். இந்தக் கோபத் தீயில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக விஜயின் அவசர செயற்குழு அமைந்துவிட்டது. போதாத காலமா என நினைத்த திமுக அரசு அவசரமாக சட்டசபையை கூட்ட உள்ளது. இதில் முதல்வர் சொத்து வரியை குறைக்கலாம், மின் கட்டணத்தை மாற்றி அமைக்கலாம். மக்களின் கோபத்தை தணிக்க பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கூட அறிவிக்கலாம்.

மதுக்கடையில் எண்ணிக்கையை குறைக்கலாம். என பல எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு அறிவிப்புகளை வெளியிட்டால் தேர்தலுக்காக வெளியிடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் தம்பட்டம் அடிப்பார்கள். தற்போது வெளியிட்டால் ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும் . இதனால் திமுக அரசு சட்டசபையில் திடீரென கூட்டுவது வரும் பொங்கலுக்குள், அரசுக்கு மக்கள் பொங்கல் வைத்து விடக்கூடாது என்ற நோக்கில் இருக்கலாம். சட்டசபையை திமுக அரசு கூட்டுவது ஒரு கல்லில் இரண்டு மாங்கா அடிக்கவா…இல்லை தேர்தல் அறிவிப்பு போல் தேங்காய் எண்ணெயை மக்கள் தலையில் தேய்க்கவா என்பது சட்டசபைக்கு கூட்டத்தில் வெளிச்சமாகும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 423

    0

    0