திராவிட கட்சிகளை தாக்கினாரா நடிகர் விஜய்..? இன்றைய கல்வி விருது விழா நாளைய அரசியல் கட்சிக்கு அஸ்திவாரமா..? வைரலாகும் விஜயின் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 1:44 pm

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில் திராவிட கட்சிகளை நடிகர் விஜய் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக, கல்வி விருது வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டுதோறும், ஜுன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் சமயத்தில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாவது வழக்கம்.

vijay award function

இந்த சூழலில், இந்த கல்வி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ரசிகர்களின் புடைசூழ மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய், நிகழ்ச்சி அரங்கிற்கு வர முடியாத அளவிற்கு கூட்டத்தால் திணறிப் போனார். பின்னர், ஒரு வழியாக மேடைக்கு வந்த அவர், மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் இடையே அமர்ந்தார். அப்போது, மாற்றுத்திறனாளி மாணவன் கீர்த்திவர்மன் நடிகர் விஜய்க்கு பரிசு கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர், அவருக்கு வைர நெக்லஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை கொடுத்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.

அதேசமயம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

முன்னதாக, மேடையில் நடிகர் விஜய் பேசியதாவது :- என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் அழகிய வசனம் ஒன்றை கேட்டேன். காடு இருந்தால் எடுத்துக்கொள்வானு.. ரூவா இருந்தால் பிடுங்கிக்கொள்வானுக.. ஆனால் படிப்பை மட்டும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று அது என்னை மிகவும் பாதித்த வார்த்தைகளாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இது தான் எதார்த்தமும் கூட, அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். ஆனால், நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக கூறுகிறேன் ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது.

ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்… நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள், எனக் கூறினார்.

அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் முடிவில் நடிகர் விஜய் இருப்பதாகவும், முதல் வாக்காளர்களை கவருவதற்காகவே இந்த கல்வி விருது விழாவை நடத்தியதாகவும் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கூறும் நடிகர் விஜய், தனது படத்தின் டிக்கெட்டுகளை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டியது தானே..? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 507

    0

    0