அரசியலுக்கு என்ட்ரி… இன்று தேதி குறிக்கிறாரா நடிகர் விஜய்…? மக்கள் இயக்கத்தினருடன் இன்று முக்கிய ஆலோசனை..!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 10:10 am

கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அட்வைஸ்களை கொடுத்து அனுப்பினார்.

எனவே, விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற் போலவே, விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நடிகர் விஜய்யை பின்தொடர்பவர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் பரிசு கொடுத்தார். சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சளிக்காமல் நின்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து சான்றிதழ் வழங்கினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது :- அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். ஆனால், நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக கூறுகிறேன் ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது.

ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்… நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர்.

இந்தநிலையில், 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 314

    0

    0