குஷ்பு ஒதுங்கியதற்கு ராதிகா காரணமா….? நட்டாவுக்கு கடிதம் எழுதிய ரகசியம்… அதிர்ச்சியில் தமிழக பாஜக!
Author: Babu Lakshmanan8 April 2024, 9:19 pm
பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த நிலையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரபல நடிகையுமான குஷ்பு, பிரச்சாரத்தில் இருந்து, தான் விலகிக் கொள்வதாக அவருக்கு கடிதம் எழுதி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேசு பொருளாக மாறி உள்ளது.
2019ம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டு வடத்தின் கீழ் பகுதியில் எலும்பு முறிந்ததால் உண்டான வலி முற்றிலுமாக குறையவில்லை, நீண்ட தூர பயணங்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, இவை இரண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானவை. இந்த வலியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள் என்று மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கியதால் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்காக என்னால் பிரச்சாரம் செய்ய இயலவில்லை என்று அந்த கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க: பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ; ஆ.ராசா குறித்து நடிகை நமீதா விமர்சனம்…!!
இத்தனைக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான அவர் இரு தினங்களுக்கு முன்பு தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்,
வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் இருவரையும் ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஏற்பட்ட முதுகு தண்டு வட எலும்பு முறிவு பாதிப்பு இன்னும் குணமாகவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஏனென்றால் எல்லோருக்குமே தங்களது உடல் நலத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு குஷ்பு முன்னுரிமை கொடுப்பதில் எந்த தவறும் கிடையாது.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து, தான் விலகிக் கொள்வதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா டெல்லியில் இருக்கும்போதே குஷ்பு அவருக்கு கடிதம் எழுதி இருக்கலாம். மாறாக சரியாக அவர் தமிழகம் வந்த நேரத்தில் ஏன் எழுத வேண்டுமா? அந்த வலிதான் அவருக்கு ஐந்தாண்டுகளாக இருப்பதாக கூறுகிறாரே?.. அது முன்கூட்டியே குஷ்புவுக்கு தெரியாமல் போனது எப்படி?… டாக்டர்கள் இப்போதுதான் அட்வைஸ் செய்தார்களா?..என்ற கேள்விகளும் எழுகின்றன.
இன்னொரு பக்கம் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதித்தான், இதை தெரிவிக்க வேண்டுமா?… அவருக்கு போன் செய்து கூட குஷ்பு சொல்லி இருக்கலாமே…அவர் மறுக்கவா போகிறார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதனால் குஷ்பு ஏதோ ஒரு மன வருத்தத்தில்தான், இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது.
2010ல் திமுக, 2014ம் ஆண்டில் காங்கிரஸ், 2020ல் பாரதிய ஜனதா என்று பிரதான கட்சிகள் அனைத்திலும் குஷ்பு ஒரு ரவுண்டு வந்து விட்டார். தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்து தேர்தல் முடிந்த கையோடு திமுகவில் இருந்து விலகினார். ஆனால் ஆறு மாதங்கள் கழித்து, டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதேநேரம் காங்கிரசில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு 2020ம் அக்டோபர் மாதம் அக்கட்சியில் விலகிய உடனேயே டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்து விட்டார்.
2021 தமிழக தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணைய பொறுப்பும் குஷ்புவிற்கு வழங்கப்பட்டது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தென் சென்னை அல்லது மத்திய சென்னையில் அவர் நிறுத்தப் படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதேநேரம் ஒரே நாளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு மறுநாளே பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு விருதுநகரில் நிற்க இடம் கிடைத்து விட்டது.
மேலும் படிக்க: கஜானாவை மட்டுமே நிரப்பும் திமுக… மக்களுக்கான ஒரே கட்சி அதிமுக மட்டுமே ; இபிஎஸ் பிரச்சாரம்…!!
இது குஷ்புவுக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்து விட்டது, என்கிறார்கள். காரணம் 1990களில் இருவருமே தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகைகள்.
2000ம் ஆண்டுக்கு பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதிலும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் முன்னணியில் இருந்தவர்கள். ராதிகா, வயதில் தன்னைவிட சீனியர் என்றாலும் கூட பாஜகவில் பணியாற்றுவதை பொறுத்தவரை குஷ்புதான் மூத்தவர்.
இந்த நிலையில்தான் பாஜகவில் முன்னணி தலைவர்கள் போட்டியிடும் விருதுநகர்,
நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பெரம்பலூர், வேலூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி தொகுதிகளிலும் 5 நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வருமாறு குஷ்புவுக்கு மாநில பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதில் முதல் தொகுதியே ராதிகா போட்டியிடும் விருதுநகர் இடம் பிடித்திருந்ததால் குஷ்பு அதிர்ந்துதான் போனார்.
இதனால்தான் தனது உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குஷ்பு ஒதுங்கி கொண்டு விட்டார் என்ற பேச்சு கோலிவுட்டில் பலமாக அடிபடுகிறது. ராதிகாவுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மறுத்தால் அது கட்சியில் தனக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதற்காகதான் ஒட்டு மொத்தமாக அவர் மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை குஷ்புவுக்கு நெருக்கமான கோலிவுட் பிரமுகர்களில் சிலர் கூறுவது இதுதான்.
“ராதிகாவுக்கும், குஷ்புவுக்கும் இடையே 2010 முதல் 2014 ம் ஆண்டு வரை திமுக தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெறுவதில் கடும் போட்டி நிலவியது. கருணாநிதி தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கருதிய குஷ்பு 2013 ம் ஆண்டு
ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் , “திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. அந்த பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்று கூறியிருந்தார்.
இதனால் கொந்தளித்த திமுகவினர், திருச்சி சென்றபோது குஷ்பு மீது செருப்பை வீசினர். சென்னையில் உள்ள அவரது வீடு நள்ளிரவில் கல் வீசி தாக்கவும் பட்டது. நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை என்று குஷ்பு மறுத்தாலும் கூட அவருக்கு எதிராக திமுகவில் கண்டன குரல் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. ஆனால் இதையும் பொறுத்துக் கொண்டு குஷ்பு மேலும் ஓராண்டு அக்கட்சியில் நீடித்தார்.
அவர் திமுகவிலிருந்து வெளியேறிய பின்பு கருணாநிதியின் அன்பைப் பெறுவதில் அதுவரை நிலவிய போட்டி ராதிகாவுக்கு இல்லாமல் போனது. இதனால் அவர் மரணம் அடையும் வரை அப்பா அப்பா என்றுதான் ராதிகா அழைப்பது வழக்கம்.
கருணாநிதியின் மறைவுக்கு பின்பு சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் துணைத் தலைவராக ராதிகா நீடித்து வந்தார். இதனால் பாஜகவில் கோலிவுட் பிரபலங்களாக குஷ்புவும், கௌதமியும் மட்டுமே இருந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கௌதமி அதிமுகவில் இணைந்து விட பாஜகவில் குஷ்பு மட்டுமே குறிப்பிட்டுக் கூறும்படியான பிரபல கோலிவுட் நடிகையாக இருந்தார்.
ஆனால் நடிகர் சரத்குமார் தனது கட்சியை கலைத்துவிட்டு மனைவி ராதிகாவுடன் பாஜகவில் இணைந்து விட்டதால் மீண்டும் இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற பனிப்போர் வெடித்து விட்டது. அதுவும் ராதிகாவுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக வாய்ப்பு வழங்கியதால் குஷ்பு மிகுந்த அப்செட்டுக்கு உள்ளாகி விட்டார் என்றே கருதத் தோன்றுகிறது.
இதுதான் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அரசியலைப் பொறுத்தவரை
ராதிகா இருக்கும் இடத்தில் ஒருபோதும் குஷ்பு இருக்க மாட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அடுத்து குஷ்பு என்ன செய்வார் என்பது தெரிய வரும். அதுவரை அவர் அமைதி காக்கத்தான் செய்வார்” என்று அந்த கோலிவுட் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
இதுவும் யோசிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.