‘ரூல்ஸ் எங்களுக்கு மட்டும் தானா..? திமுகவினருக்கு இல்லையா..? அதிமுக பேனர்களை அகற்ற வந்த போலீசாருடன் எஸ்பி வேலுமணி வாக்குவாதம்…!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 11:13 am

கோவை – சூலூர் அருகே அதிமுக பேனர்களை அகற்ற வந்த போலீசாருடன் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவையில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் பங்கேற்க வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் கிருத்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த கிறிஸ்தவர்கள், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திமுக பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி கொடுக்கும் போலீஸ், எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும், கிருஸ்தவர்கள் நடத்தும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது என போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறும், தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற வேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கிறிஸ்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கிருத்துவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிகழ்வுகளின் போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர். திமுக அரசு சமூக நீதி பேசுவதாக கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம், அதை தற்போது அரசியலாக முயற்சித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 401

    0

    0