ஜனநாயகம் தோற்றது… பணநாயகம் வென்றது : வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர் ஆவேசம்…!!
Author: Babu Lakshmanan2 March 2023, 1:34 pm
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணத் தொடங்கிய போதில் இருந்தே, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
தற்போது வரை 7 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 20,201 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு அவசர அவசரமாக வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணநாயகம் வென்றதாகவும், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.