அதிமுக பொதுச்செயலாளராகிறாரா எடப்பாடி பழனிசாமி..? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு… நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்திருக்கும் ஓபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 8:02 pm

அ.தி.மு.க, பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பை வெளியிடுகிறது.

கடந்த ஆண்டு ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் இபிஎஸ் தரப்பினர் நடத்தி முடித்து விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு இபிஎஸ்ஸை தவிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புது மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதாவது, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காகவும் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பை வெளியிடுகிறது. ஒருவேளை இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக வந்தால், நாளையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை இருதரப்பினரும் உன்னிப்பாக எதிர்நோக்கி இருக்கின்றனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!