அதிமுகவை வீழ்த்த துடிக்கும் மூவர் அணி…. தொண்டர்களின் ஆதரவை ஓபிஎஸ் இழந்தது எப்படி…? அசராமல் நின்று சாதிக்கும் இபிஎஸ்…!!
Author: Babu Lakshmanan1 July 2022, 5:18 pm
ஆடியோ அரசியல்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தது முதலே சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறார் என்பது அரசியலில் ஆர்வம் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.
இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஊடகங்களுக்கு அடிக்கடி
பேட்டி அளிப்பது, தனது ஆதரவாளர்களிடம் செல்போனில் பேசியதை பதிவு செய்து பரபரப்பு ஆடியோவாக வெளியிடுவது, ஆன்மீக சுற்றுப் பயணம் என்ற பெயரில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் ஆதரவை திரட்ட முயன்றது என அவர் எடுத்த எந்தவொரு அவதாரமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
அதுவும் ஒரு முறை “முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியிருக்கிறேன். அவரும் நான் சொல்வதை கேட்டு அப்படியே நடப்பார்”என்று சினிமா பட பாணியில் ரீல் சுற்றியது அவரை கேலி பொருளாக பார்க்கும் அளவிற்கு மாறியது.
ஒற்றை தலைமை
அதன்பிறகு பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் மூலம், அதிமுகவிற்குள் நுழைவதற்கு அவர் எடுத்த பகீரதப் பிரயத்தன முயிற்சியும் கானல் நீராகவே ஆனது. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகிப் போய் சசிகலா இருந்தார்.
இந்த நிலையில்தான், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 99 சதவீதம் பேர் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கட்சி வலுவடையும், அவர் ஒருவரால்தான் திமுகவுக்கு கடும் போட்டியை தரமுடியும் என்ற முடிவுக்கு வந்து ஒற்றை தலைமை முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அது பலமாக எதிரொலித்ததையும் காண முடிந்தது.
இது, தனது தீவிர ஆதரவாளரான ஓபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடியாக கருதும் சசிகலா தற்போது அதை சாக்காக வைத்து மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் பேசும்போது “அதிமுக என் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்றே தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்” என்று தனது சுய விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.
அதாவது ஓபிஎஸ் எப்படியும் தன் பக்கம்தான் வருவார், தனது தலைமையை நிச்சயம் அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் சசிகலா இப்படி கூறியிருக்கலாம்.
அதேநேரம் தனது தம்பி ராஜா மூலம், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என ஓ பன்னீர்செல்வம் தூதுவிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது.
தினகரன் சூளுரை
மறுபக்கம், டிடிவி தினகரனோ “இன்னொரு கட்சி விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். அதேநேரம் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். அமமுக பொதுக்கூட்டங்களிலும் இப்படி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு அதிமுக சென்று விடக்கூடாது என்பதில் ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் மூவரும் உறுதியாக இருப்பது தெரிகிறது.
ஆகையால்தான் இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தனித்தனியாக சுற்றுப் பயணம் செய்து தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் இவர்களை நம்பி ஒரு போதும் அதிமுக தொண்டர்கள் செல்லமாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் உறுதிபட கூறுகின்றனர்.
மறைமுக ஆதரவு
“இதற்கு முக்கிய காரணம், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய 3 பேரும் எதனடிப்படையில் ஒன்று சேர்கிறார்கள் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டது முதலே ஓபிஎஸ் மறைமுகமாக அவருக்கு எதிராக செயல்படுவதுடன் திமுக ஆதரவு நிலையைத்தான் மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சியின் அவலங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஓபிஎஸ் கண்டிக்க
மிகுந்த தயக்கம் காட்டுகிறார். பயப்படுகிறார்.
திமுக அரசுக்கு எதிராக அவர் வெளியிடும் ஒரு சில கண்டன அறிக்கைகளும் கூட ஆட்சியாளர்களுக்கு மயிலிறகால் வருடிக் கொடுப்பது போலவே உள்ளது.
அதுமட்டுமின்றி தனது மகன் ரவீந்திரநாத் எம்பியை, ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்திக்க வைத்து, திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது என்று பாராட்ட வைத்ததும் ஓபிஎஸ்தான் என்ற வலுவான எண்ணமும் அதிமுக தொண்டர்களிடம் பரவலாக காணப்படுகிறது.
30 வயதுக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அனைவரிடமும் திமுக எதிர்ப்பு நிலை மட்டுமே உள்ளது. ஏனென்றால் இவர்கள் ஜெயலலிதா தனது இறுதி மூச்சு உள்ளவரை திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தவர் என்பதை அறிவார்கள். 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எம்ஜிஆர் ஆட்சியை நேரில் பார்த்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எம்ஜிஆர், கருணாநிதி தலைமையிலான திமுகவை எப்படி எதிர்த்தார் என்பதும் நன்றாகத் தெரியும்.
திமுக உதவி
இந்த திமுக எதிர்ப்பு மன உறுதி, அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஊறியது. அது எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே இருப்பதை அவர்கள் காண்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்சோ, சசிகலா டிடிவி தினகரன், ஸ்டாலின் ஆதரவு என்னும் மூன்று வித நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார். இது அப்பட்டமாகவே அதிமுக தொண்டர்களுக்கு தெரிகிறது.
தவிர ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலம் திமுக அரசின் ஆதரவை ஓபிஎஸ் மறைமுகமாக நாடியதாக கூறப்படும் தகவலையும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பராசக்தி படம் குறித்து சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பாராட்டி பேசியதையும் அதிமுக தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை.
சசிகலா கைக்கு அதிமுக சென்றால் அவரை ஊழல்வாதி, சிறைக்கு சென்றவர் என்ற முத்திரையை குத்தி திமுக எளிதில் அவரை வீழ்த்திவிடும். அதனால்தான் திமுக தலைவர்களில் பலர் அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்றால் ரொம்ப வசதியாக இருக்கும் என்று மனதுக்கு நினைப்பதையும் அதிமுக தொண்டர்கள் அறிவார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, சசிகலாவும், டிடிவிதினகரனும் அவர்களது மன்னார்குடி குடும்பத்தினர் 30 பேரும் போயஸ் தோட்ட இல்லத்தில் மட்டுமின்றி அதிமுகவிற்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி கட்சியை ஆக்கிரமித்து வைத்திருந்ததை தொண்டர்கள் முழுமையாக தெரிந்து வைத்துள்ளனர்.
சசிகலா தனது பிரச்சாரத்தின் போது கூட்டம் நிறைய தெரியவேண்டும் என்பதற்காக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையின் சந்திப்புகளில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்துவதையும் அதிமுக தொண்டர்கள் அறிந்துள்ளனர். அதனால் அவருடைய சுற்றுப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
டிடிவி தினகரனை பற்றியும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்ப்பதற்காக அவர் என்னென்ன முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டார் என்பதும் அவர்களுக்கு அத்துபடி.
தொண்டர்கள் உஷார்..
அவருடைய கண்மூடித்தனமான செயல்பாடுகளால் அவரை நம்பிச்சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தங்களது பதவியை இழந்ததுதான் மிச்சம்.
தவிர, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசை தினகரன் கவிழ்த்திருந்தால், அதன் பலன் உடனடியாக திமுகவுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கும் என்பதும் அவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனவேதான் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி செய்த, எப்போதும் திமுக எதிர்ப்பு நிலையில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார்.
சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் அவர் தனது ஆட்சி காலத்தில் நடந்துகொண்ட விதமும் அதிமுக தொண்டர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. எனவேதான் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் பக்கம் தங்கள் கவனம் திரும்பி விடாமல், எடப்பாடி பழனிசாமி மீதே பதிந்துள்ளது.
ஆக, என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த மூவர் அணியின் முயற்சிக்கு ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. இவர்கள் விவகாரத்தில் அதிமுக தொண்டர்கள் ரொம்பவும் உஷாராகவே இருக்கின்றனர்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.