MGR நினைவு நாளில் ஆட்டம் பாட்டம் தேவையா..? இது இதயமா..? இல்ல இரும்பு குடோனா..? திரையுலகினரின் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு அதிமுக எதிர்ப்பு..!!!
Author: Babu Lakshmanan23 November 2023, 12:10 pm
எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள திரையுலக சங்கத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவிற்காக டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள திரையுலக சங்கத்திற்கு அதிமுக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :- டிச.24 எம்ஜிஆர் நினைவு நாள்.நாடே கண்ணீர் விடும் அந்நாளில் திரையுலகினர் மட்டும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆடிப்பாடி கொண்டாட உள்ளனர்! இத்தனைக்கும் நடிகர் சங்கம் உருவாக பெரும் பொருளுதவியவர் எம்ஜிஆர்! தமிழ் திரையுலகினருக்கு இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்பு குடோன் இருக்கலாமா?, என தெரிவித்துள்ளார்.