கொலைவெறி தாக்குதல் உங்களுக்கு “சிறப்பான நிகழ்வா”..? CM ஸ்டாலினின் அறிக்கையால் சர்ச்சை… கொந்தளிக்கும் அதிமுக..!!
Author: Babu Lakshmanan26 January 2024, 8:31 am
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப் பிரபு, வழக்கம் போல செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேசபிரபுவை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது..
இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இதனை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப்பிரபு அவர்களுக்கு பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிட ஆணை பிறப்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை தற்பாது சர்ச்சையாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் உங்களுக்கு சிறப்பு நிகழ்வா என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த தவறை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையை பகிர்ந்த அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரின் X தளப்பதிவிற்கு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.