அதிமுக பெண் கவுன்சிலர்கள் கடத்தல் … பதவிக்காக திமுகவினர் கடத்தியதாக புகார்.. ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர்!!

Author: Babu Lakshmanan
21 January 2022, 2:39 pm

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 13 வார்டுகளை கொண்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 5 வார்டுகளும், திமுக 6 வார்டுகளையும், பாமக, கம்யூனிஸ் கட்சி தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 9வது வார்டு உறுப்பினர் பாரப்பட்டி குமார் காலமானதால், அந்த வார்டு இடைத்தேர்தலில் அவரது தம்பியும், பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய பொறுப்பாளரான பாரப்பட்டி சுரேஷகுமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்தநிலையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஊராட்சிகுழு தலைவர் பதவியை பிடிக்க பாரப்பட்டி சுரேஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்காக ஏற்கனவே தலைவர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை ரத்துசெய்ய 10 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என்பதால் அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்களை கடத்த திமுகவினர் திட்டமிட்டனர்.

ஒன்றியகுழு தலைவர் ஜெகநாதன் அதிமுக கவுன்சிலர்கள் காவேரி, மஞ்சுளா, பூங்கொடி, சங்கீதா ஆகியோருடன் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் சாமி தரிசனம் செய்ய காரில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் போலிசாரின் தடுப்பு வேலிகளை சாலையின் குறுக்கே வைத்து பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்த 20 பேர் கொண்ட திமுக கும்பல், காரில் இருந்த 5வது வார்டு உறுப்பினர் சங்கீதா, 8வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி, தங்கள் காரில் ஏற்றிகொண்டு மின்னல் வேகத்தில் ஏறிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமாரபாளையம் காவல்நிலையத்தில் இந்த கடத்தல் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், பனமரத்துப்பட்டி ஒன்றியகுழு தலைவர் ஜெகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆட்சியரின் உதவியாளரிடம் புகார் மனுவை அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, அதிமுக ஆட்சியில் ஜனநாயகமுறைப்படி தேர்தெடுக்கப்பட்டது. ஆனால் திமுகவின் அராஜகத்தின் மூலம் தலைவர் பதவியை அடைய பார்க்கின்றனர் என்றார். சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி்தேர்வு செய்யப்பட்ட தலைவர்களுக்கு நெருக்கடி தருகின்றனர். பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட நிலையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் இல்லை. நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களையும் மிரட்டி திமுகவில் இணைக்க பார்க்கின்றனர். திமுகவினருக்கு தேர்தலில் போட்டியிட திராணி இல்லை என்றார்.

கத்திமுணையில் பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்கு இது தெரியாதா..? என கேள்வி எழுப்பினார். கவுன்சிலருக்கே இந்த தலை என்றால் பாமர மக்களுகின் நிலை கேள்விகுறி என்றார். இரண்டு பெண் கவுன்சிலர்களின் கணவர்களும் அரசுபணியில் இருப்பதால் அவர்களை மிரட்டி பனியவைக்கின்றனர், என்றார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 10918

    0

    0