ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி ‘பணால்’… சைலண்ட் ஆக்ஷனில் இபிஎஸ்… அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 6:24 pm

அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமையவேண்டும் என்ற விருப்பம் கட்சி தொண்டர்களிடம் வலுப்பெற்று வந்தது.

எதிர்பார்ப்பு

இதற்கு முக்கியக் காரணம் இரட்டை தலைமையில் செயல்படுவதால் கட்சிப் பணிகள் தொய்வு அடைந்துள்ளது என்ற மனக் குமுறல் அவர்களிடம் இருந்ததுதான்.

EPS - Updatenews360

இதையடுத்து, இது தொடர்பான தீர்மானம் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்ற தகவல் வெளியானது. இதனால் அதிமுகவின் பொதுச் செயலாளரராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடம் எழுந்தது.

ஓபிஎஸ் வழக்கு

இந்த நிலையில்தான் வக்கீல் ராம்குமார், சுரேன் பழனிசாமி, சண்முகம் என்னும் மூவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நடத்திய விசாரணையில், பொதுக்குழுவை கூட்ட தடை இல்லை. இந்த தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டும், இதை நிறைவேற்றக் கூடாது என்ற விவகாரத்தில் எல்லாம் கோர்ட் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சண்முகம் அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று கூறி இரவோடு இரவாக ஐகோர்ட்டில் மேல்முறையீடும் செய்தார்.

OPS - Updatenews360

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானக் குழு வடிவமைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த, 23 தீர்மானங்களை நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்களை விவாதித்தாலும் கூட அது தொடர்பாக தீர்மானம் எதையும் நிறைவேற்ற கூடாது!” என்று உத்தரவிட்டனர்.

பரபரப்பான பொதுக்குழு

இந்த நிலையில்தான் சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக 85 வயது தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

OPS - Updatenews360

மேலும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளையும் ஏற்று “ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓ பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவு நிர்வாகி வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலரும் “இது சட்டத்துக்குப் புறம்பானது” என்று கூறி பொதுக்குழுவை புறக்கணித்து விட்டு பாதியிலேயே வெளியேறினர்.

டெல்லி பயணம்

பின்னர் வைத்திலிங்கம் கூறுகையில் “பொதுக்குழுவில் ஏற்கனவே பரிந்துரைத்த 23 தீர்மானங்களை ரத்து செய்தனர். அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அவைத் தலைவர் தேர்வும் செல்லாது. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி உள்ளனர். சிலரிடம் போலி கையெழுத்து வாங்கி உள்ளனர்” என்று ஆவேசமாக கூறினார்.

இந்த பரபரப்பான சூழலில் நேற்றிரவு திடீரென ஓ. பன்னீர் செல்வமும் அவருடைய ஆதரவு நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவின் மனுதாக்கல் நிகழ்ச்சியில் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக கூறப்பட்டது.

Delhi Ops - Updatenews360

எனினும், ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னை ஆலோசிக்காமல் ஜூலை 11 பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கட்சி விதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சிவி சண்முகம் அதிரடி

அதேநேரம் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம் எம்பி,
ஓ பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி கருத்துகளை தெரிவித்தார்.

குறிப்பாக 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரித்து இருப்பதால் அவருடைய ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிவி சண்முகத்தின் பதில் இதுதான்.

CV Shanmugam - Updatenews360

“வைத்திலிங்கம் தேவையற்ற கருத்துகளை, தலைமை கழக கூட்டத்தில் ரவுடித்தனமான முறையில் பேசியது போல் பேசி உள்ளார். கட்சி விதி 19ன் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக் குழுவை கூட்டலாம். இல்லை என்றால், பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர் கையெழுத்திட்டு கொடுத்தால், அதனை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம்தான் கொடுக்க வேண்டும் இல்லை. அதனை யாரிடமும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால், 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறைப்படி பொதுக்குழு நடத்தப்பட்டது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை.

அவைத்தலைவரை இதற்குமுன்பு எம்ஜிஆர், ஜெயலலிதாதான் நியமனம் செய்து அறிவிப்பார்கள் என வைத்திலிங்கம் கூறினார். ஆனால், கட்சி சட்டம் அப்படியில்லை. ஜெயலலிதா என்ன கூறுகிறாரோ அதை ஏற்று கொண்டோம். ஜெயலலிதா கூறியது சட்டம். ஜெயலலிதா சொல்வதுதான் எங்களுக்கு சட்டம். அதுவே வேதவாக்கு. அப்படியே ஏற்று கொண்டோம். அவர் சட்டப்படி செயல்பட்டார். முதலில் அவர் அறிவிப்பார். பிறகு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவார். ஆனால், வைத்திலிங்கம் திட்டமிட்டு சொல்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமனம் செய்வார் என்கிறார். விதியில் அப்படி எதுவும் கூறப்படவில்லை.

பதவி பறிப்பு

பழனிசாமி, பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு தமிழ் மகன் உசேன் தற்காலிக அவை தலைவராக இருப்பார் என அறிவித்தோம். உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அவைத்தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது தீர்மானம் கிடையாது. இந்த பதவிக்கு பொதுக்குழு கூடிதான் நியமனம் செய்யவேண்டும் என்பது விதி. இதில் எங்கு தவறு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு உள்ளது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள் பார்த்து கொள்வோம்.தேர்தல் பற்றி நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டுள்ளோம்.

கட்சியை உடைத்த, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர் செல்வத்திற்காக பொது மன்னிப்பு வழங்கி பதவி வழங்குவதற்காக பொதுக்குழுவை திருத்த அதிகாரம் இல்லாதபோது, கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ததை ஏற்று கொண்டார்கள். டிசம்பர் 2021-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. தேர்தல் மற்றும் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. நேற்றோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு காலாவாதியாகிவிட்டது. இனி பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. பழனிசாமி தலைமை கழக செயலாளர் மட்டுமே. இதுதான் இன்றைய நிலை.
இனிமேல், பொறுப்பாளர்கள் மட்டுமே கட்சியை வழிநடத்துவார்கள். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, கட்சி விதி 20, பிரிவு அ-வின் படி, புதியவர் வரும்வரை பொறுப்பாளர்கள் கட்சியை வழிநடத்துவர். பொதுக்குழுவின் முடிவுகளில் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதிமுக பொதுக்குழுவில் 2550 உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது. பன்னீர்செல்வத்துடன் இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எந்த கட்சிக்கு செல்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

திமுக மீது சாடல்

அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம். இதில் திமுகவினரோ, முதலமைச்சர் ஸ்டாலினோ தலையிட வேண்டிய அவசியமில்லை. அதில் கேள்வியும் கேட்க முடியாது. ஸ்டாலினின் மகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது திமுகவில் என்ன நடக்கும் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அதனால் எங்கள் கட்சி பிரச்சினை குறித்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்” என்று திமுகவுக்கும் அவர் சாட்டையடி கொடுத்தார்.

“தலைமை தேர்தல் கமிஷனை நேரடியாக நாடி இருப்பதன் மூலம் அதிமுகவின் விதிமுறைகளை மீறி ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டிருக்கிறார்” என்று டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ்-க்கு சிக்கல்

“பொதுவாக விடிந்தால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படவிருக்கும் குற்றவாளிகள், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் போன்ற மிக கடினமான நேரங்களில்தான் நள்ளிரவில் ஒரு அவசர மனுவை விசாரணைக்காக கோர்ட் ஏற்பது வழக்கம். ஆனால் ஒரு கட்சியின் பொதுக் குழு கூட்டம் தொடர்பான வழக்கை கோர்ட் எடுத்துக் கொண்டிருப்பது சட்ட வல்லுனர்களிடையே ஒரு சர்ச்சை பொருளாகவே பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பொதுக்குழுவில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது கோர்ட்டின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற முக்கிய நிபந்தனையுடன் பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்ற கோர்ட் அனுமதி வழங்கி இருக்கலாம் என்பதும் அவர்களது ஆதங்கமாக உள்ளது. இப்படி பல நிகழ்வுகள் முன்பு நடந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இப்போது தேர்தல் கமிஷனில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் ஜூலை மாத அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள்தான் ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு கூடாது என்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பலமான பேச்சும் உண்டு.

உண்மையிலேயே சில நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழுவை நடத்த உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டில்தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இப்பிரச்சினையை முறையிட்டு இருக்கவேண்டும். ஆனால் தங்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படலாம், கட்சியை விட்டு நீக்கப்படலாம் என்ற பயத்தின் காரணமாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு தற்போது இப்பிரச்சினையை கொண்டு சென்றுள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பினர் இப்படி முந்திக்கொண்டு தேர்தல் கமிஷனிடம் அடுத்த மாதம் நடைபெறும் பொதுக் குழுவுக்கு தடை கேட்பது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அதிமுகவில் யாராவது புகார் அளித்தால் அதன் அடிப்படையில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழ்மகன் உசேனை அவைத் தலைவர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்தும், எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தும் பேசியுள்ளனர். அதன்பிறகே 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவைத்தலைவர் பதவி செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்திய பிறகே முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இப்படி பேசி இருப்பதால் அதை முக்கிய வாதமாக வைக்க முடியும்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போது அதிகபட்ச எம்எல்ஏக்கள், எம்பிக்களை யார் கொண்டு இருக்கிறார்களோ அவர்களிடமே கட்சியை ஒப்படைக்கவும் இது முக்கிய காரணமாக அமையலாம். எனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் வலியச் சென்று, சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாகவே கருத தோன்றுகிறது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் ஒரு பகீர் தகவலை தெரிவிக்கின்றனர்.

  • Fans Creating Nonsense Hashtagsடிரெண்டாகும் காலமானார் ஹேஷ்டேக்… எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்!
  • Views: - 698

    0

    0