பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார்…நடந்து முடிந்தது பொதுக்குழுவே அல்ல, ஓரங்க நாடகம்… ஓபிஎஸ் தரப்பு தடலாடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 June 2022, 4:13 pm
Quick Share

அதிமுகவில் வெடித்துள்ள பிரச்சனை குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக 3 முறை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று கூறினர்.

மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு, அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இபிஎஸ் தரப்பினரின் இந்த செயல்களால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். நேராக பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பொதுக்குழுவில் தீர்மானங்களை ரத்து செய்ய உரிமை இல்லை. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் அவைத் தலைவரை தேர்வு செய்ய முடியும். தற்போது, தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பொதுக்குழுவே செல்லாததாகி விட்டது. அதேபோல, பொதுக்குழுவை கூட்ட அவைத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும்.

பொதுக்குழுவில் தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். பொதுக்குழுவில் பங்கேற்றவர்களில் சிலர் போலி கையெழுத்துப் போட்டுள்ளனர். கட்டுப்பாடு இல்லாத, காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடைபெற்றுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களில் அங்கீகாரம் அளிப்பதும் தீர்மானங்களில் ஒன்று, அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார். ஜனநாயக முறைப்படி பொதுக்குழு நடைபெறவில்லை. பொதுக்குழுவாக தெரியவில்லை. அரைமணி நேர ஓரங்க நாடகமாக இருந்தது, எனக் கூறினார்.

  • Suriya Beats Vijay and Rajini விஜய், ரஜினியை முந்திய கங்குவா.. இது லிஸ்டுலயே இல்லையே!
  • Views: - 525

    0

    1