ஜெயலலிதா பாணியில் இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு…? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அதிமுக மா.செ.க்கள் கூட்டம்…!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 8:33 am

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் இப்போது ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக புகைச்சலில் இருந்து வருகிறது. அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை அண்ணாமலை தொடர்ந்து கூறி வருவதால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக, அண்ணாவைப் பற்றி கூறிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். அதேவேளையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே, பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவை பிறப்பித்ததாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேவேளையில், ஜெயலலிதா பாணியில் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது. அதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!