நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!

Author: Babu Lakshmanan
3 May 2024, 7:21 pm

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதியே நடந்து முடிந்துவிட்டாலும் கூட திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் சில உள்ளடி வேலைகள் நடந்திருப்பது கடந்த சில நாட்களாக வெளியுலகிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை 6 பொறுப்பு அமைச்சர்களும் 9 மாவட்ட செயலாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர களப்பணி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க: டூவீலருக்கு 28% ஜிஎஸ்டி வரி தேவையா..? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்..!!!

இதேபோல அதிமுக, பாஜக கட்சிகளில் பல தொகுதிகளில் பூத் முகவர்கள், வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை இருக்காமல் பல மணி நேரம் முன்கூட்டியே வெளியேறி விட்டதாக மேலிடத்திற்கு புகார்கள் தட்டி விடப்பட்டுள்ளன. திமுகவுக்கு சாதகமாக இப்படி நடந்து கொண்ட கருப்பு ஆடுகள் யார் என்பது பற்றி இரு கட்சிகளும் ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து வைத்துள்ளன. அவர்கள் மீதும்
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இந்த நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாநில பாஜக தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் அக்கட்சியில் சேர தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்ததாக ஒரு நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டு அதிமுக தொண்டர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

திருப்பூர், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாகவும் அதனாலயே பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்க செங்கோட்டையன் தயாராக இருக்கிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டும் இருந்தது.

இதை உடனடியாக மறுத்த செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது
“1972ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பயணித்து வருகின்றேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை 45 ஆண்டு காலம் எனது நேர்வழி பயணம், எந்த இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு சிறு குற்றம் கூட சொல்ல முடியாத அளவிற்கு எனது வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியை பார்த்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.

இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னாள் என்னிடம் கருத்துகளை கேட்டு இருக்கவேண்டும். கோடானு கோடி தொண்டர்களின் இதயத்துடிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

செங்கோட்டையன் நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். பாஜவுக்கு செல்லவில்லை என்று உறுதிப்பட தெரிவித்தாலும் கூட தனது பேட்டியில் அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மோதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் நெருப்பின்றி புகையாது. இருவருக்கும் இடையே கசப்புணர்வு உள்ளது என்று பொதுவெளியில் எழுந்துள்ள மறைமுக விமர்சனம் அதிமுக தொண்டர்களை கவலை அடையச் செய்துள்ளது.

ஆனால் செங்கோட்டையனின் ஆதரவாளர்களோ அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒருபோதும் அவர் எடுக்க மாட்டார் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

இன்னொரு பக்கம் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளுக்கும் தேர்தல் செலவுக்காக டெல்லி மேலிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படும் சில நூறு கோடி ரூபாய்களை விநியோகிக்காமல் அதை ஏராளமான நிர்வாகிகள் சுருட்டி தங்களது பைகளை நிரப்பிக் கொண்டு விட்டதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

இது பற்றி முன்னணி ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி இதுதான்.

“தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பூத் முகவர்கள், ஐந்து பூத்களுக்கு பொறுப்பாளரான சக்தி கேந்திர நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளை கவனிக்க கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் செலவு தொகை வழங்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்தப் பணத்தில் ஒரு பூத்திற்கு 50,000 ரூபாய் வரையும், மாவட்ட நிர்வாகிகளுக்கு தலா 30,000 ரூபாயும், மண்டல நிர்வாகிகளுக்கு தலா 20,000 ரூபாயும் பிரித்து கொடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். என்றபோதிலும் பல தொகுதிகளில் கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை முழுதுமாக கட்சியினருக்கு வழங்காமல் நிர்வாகிகளே பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

அது மட்டுமல்ல, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர் தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட பணத்தையும் பாஜக நிர்வாகிகள் அப்படியே அமுக்கி விட்டதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பணம் வாங்கியவர்களும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செல்வதை தவிர்த்து விட்டனர்.

தவிர இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சென்னை, மதுரை, சிதம்பரம், விருதுநகர் தொகுதிகளில் இருந்து மேலிடத்திற்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும் உள்ளன. மேலும் பல தொகுதிகளில் பணத்தை சுருட்டியவர்களின் பெயர்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டும் வருகின்றன. இதனால் ஆங்காங்கே உள்ளூர் பாஜக நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதலும் ஏற்பட்டு வருகிறது.

எனவே தேர்தல் செலவுக்கு வழங்கிய பணம் முறையாக கட்சியினருக்கு செலவிடப்பட்டு இருக்கிறதா? என்பதை கட்சி மேலிடம் ஆய்வு செய்யவேண்டும். பணத்தை அபேஸ் செய்த விவகாரத்தில் மாநில நிர்வாகிகளின் பெயர்களும் நிறைய இடம் பெறுகின்றன. அதனால் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த பிற மாநில தலைவர்கள் அடங்கிய குழுவை நியமிக்கவேண்டும்.

அவர்கள் வாயிலாக ஒவ்வொரு தொகுதியிலும் பணியாற்றிய தொண்டர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கவேண்டும். அப்போதுதான் கட்சி மேலிடத்திற்கு தேர்தலில் செய்த செலவு குறித்த உண்மையான விவரம் தெரியவரும். பணத்தை பதுக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பாஜக நிர்வாகிகள் தரப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் இந்த முறை பாஜக தலைமையில் கூட்டணி அமைந்ததாலும், அண்ணாமலை வகுத்த தேர்தல் வியூகங்களாலும் பாஜக கூட்டணிக்கு டெல்லி மேலிடம் தேர்தல் செலவுக்காக கணிசமான தொகையை கொடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அந்த பணத்தை கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் பரவலாக விநியோகம் செய்யாமல் அமுக்கிவிட்டனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்தான். ஓரளவாவது தொண்டர்களுக்கு பணம் சென்று சேர்ந்திருந்தால் பாஜக கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் இன்னும் அதிகரித்திருக்கும். தமிழக பாஜகவுக்கு முதல் தடவையாக இந்த கசப்பு அனுபவம் கிடைத்துள்ளது என்பதால் 2026 தமிழக தேர்தலுக்குள் இதை சரி செய்து விட்டால் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும். இல்லையென்றால் சிக்கல்தான் வரும்.

அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமைதியாக செயல்படக் கூடியவர். தடாலடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கமாட்டார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது அடுத்த முதலமைச்சராக செங்கோட்டையன்தான் தேர்வு செய்யப்படுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தனக்கு அந்த பதவியே வேண்டாம் என்று அவர் ஒதுங்கிக் கொண்டு விட்டார். அப்படிப்பட்டவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இறங்க மாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

இருந்தபோதிலும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருக்குமேயானால் அது உடனடியாக அகற்றப்பட்டால் அக்கட்சிக்கு நல்லது. இல்லையென்றால் அதிமுகவை துண்டாடத் துடிக்கும் ஒரு சில மாற்றுக் கட்சியினருக்கு அது நல்வாய்ப்பாக மாறிவிடும் அபாயமும் உண்டு” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதிமுக, பாஜக கட்சிகள் தங்களுக்கு கிடைத்த நாடாளுமன்றத் தேர்தல் அனுபவம் மூலம் இதை புரிந்து கொண்டால் சரிதான்!

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 346

    0

    0