‘மாமன்னன்’ படம் ஓடுவது முக்கியமல்ல… 2 ஆண்டுகளில் மருத்துவத்துறையை சீரழித்துவிட்டது திமுக ; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan5 July 2023, 11:34 am
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது,ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடத்தப்படவுள்ள மாநாடு பணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கும் அதிமுக மாநாட்டுக்கான இலட்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பின்னர், கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது :- காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் போக்கை கண்டுகொள்ளாமல் உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமார். அணையை மட்டும் திறந்தால் போதாது; டெல்டா விவசாயிகளுக்கு தேவையான பாசன வசதியை திமுக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்
அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது ; கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டது அதிமுக தான். திமுக ஆட்சியில் மருத்துவத்துறை நிர்வாக திறனின்றி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது.
மாமன்னன் திரைப்படம் ஓடுவது முக்கியமல்ல. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது தான் அவசர அவசியம். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. ஒரே இயக்கமாக திகழ்கிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கின்ற ஒரே இயக்கம். அதிமுக ஆட்சியின் போது சபாநாயகர் தனபாலின் சட்டையை கிழித்து அவரது இருக்கையில் அமர்ந்தவர்கள் திமுகவினர் தான், எனக் கூறினார்.
0
0