இது என்ன பாகிஸ்தானா..? வஜ்ரா வாகனம் எதுக்கு..? விவசாயிகள் மீதான மீதான குண்டாஸை உடனே ரத்து செய்யுங்க ; திமுகவை எச்சரிக்கும் இபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 3:39 pm

விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3.300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த விடியா திமுக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை இந்த விடியா திமுக அரசு போட்டிருக்கிறது.

மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், விடியா திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 297

    0

    0