போதைப்பொருளுக்கு அடுத்து வெடிகுண்டு கலாச்சாரமா..? சவக்குழியில் சட்டம் ஒழுங்கு ; திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 2:38 pm

மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). மருது சேனை அமைப்பின் நிறுவனரான இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். தற்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மருது சேனை அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது

இந்த நிலையில், அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது, காரின் மீது பெட்ரோல் குண்டுவீசி ஆதிநாராயணனை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.

சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 313

    0

    0