அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு இருப்பது நியாபகமிருக்கா..? நாங்க சுரண்டி வந்தவர்களல்ல… ஆர்.எஸ் பாரதி மீது இபிஎஸ் பாய்ச்சல்..!!
Author: Babu Lakshmanan15 July 2022, 6:27 pm
சென்னை : திமுகவினரைப் போன்று அதிமுகவினர் ஒன்று சுரண்டி வந்தவர்கள் அல்ல என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது, ‘என்னை இன்னும் பழைய பழனிசாமி என நினைத்தீர்களா ஸ்டாலின் அவர்களே, அது நடக்காது’, எனக் குறிப்பிட்டு பேசி அதிரடி காட்டினார். அவரது இந்தப் பேச்சுக்கு பதிலளித்த திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி, ‛பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்’ எனக் கிண்டலாக கூறியிருந்தார்.
மேலும், அதிமுகவினருக்கும், ஆர்.எஸ். பாரதிக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நிலவி வந்தது.
இந்த நிலையில், சேலம் தலைவாசலில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: சேலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமானால் திமுக ஆட்சியாக இருக்கலாம், ஆனால் சேலத்தில் அதிமுக தான். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சாதனை படிக்கட்டுகளாக மாற்றுவோம். கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆரின் சொத்தை சில பேர் அபகரிக்க பார்க்கின்றனர். அதிமுக உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதனை தொட்டுப்பார்க்க முடியாது. ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுக.,வை செயல்பட விடாமல் முடக்க பார்க்கிறார். ஸ்டாலின் அதிமுக.,வின் ஒரு தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது.
துரோகிகளும், திமுக.,வும் சேர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுக.,வை அழிக்க நினைத்தால் நடக்காது. காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இப்போது அமைச்சர்களாக இருக்கும் 13 பேர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா? அவர் கட்சியில் இருந்து கைவிடப்படும் சூழலில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்க பார்க்கிறார். நாங்கள் பேச ஆரம்பித்தால், திமுக தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அதிமுக தொண்டர்கள் உழைத்து வாழ்பவர்கள், அன்னக்காவடிகள் கிடையாது, திமுக.,வை போன்று சுரண்டி வந்தவர்கள் அல்ல, எனக் கூறினார்.
0
0